ஹைதராபாத் குண்டுவெடிப்பு: அனைவரும் விடுதலை

ஹைதராபாத் மெக்கா மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி அஸிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து என்ஐஏ சிறப்பு
ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ சிறப்பு  நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சுவாமி அஸிமானந்த் (கோப்புப் படம்).
ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சுவாமி அஸிமானந்த் (கோப்புப் படம்).

ஹைதராபாத் மெக்கா மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி அஸிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
அப்போது 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் ஒரு குற்றச்சாட்டைக் கூட நிரூபிக்க முடியாமல் அரசு தரப்பு தோல்வியடைந்து விட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
மெக்கா மசூதியில் கடந்த 2007ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் 9 பேர் பலியாகினர். மேலும் 58 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் வெடிக்காத நிலையில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, ஹைதராபாதில் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் 5 பேர் பலியாகினர்.
முதலில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதன்பிறகு சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது. பின்னர், என்ஐஏ அமைப்பு விசாரணையை மேற்கொண்டது.
இந்த வழக்கில், ஹிந்து அமைப்பைச் சேர்ந்த சுவாமி அஸிமானந்த், பரத் மோகன்லால் ரதேஷ்வர், ராஜேந்திர சௌதரி, தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிராக என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் 226 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. 411 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, ஹைதராபாத் என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. ரவீந்தர் ரெட்டி தனது தீர்ப்பை திங்கள்கிழமை வெளியிட்டார். அப்போது அவர், 'சுவாமி அஸிமானந்த், பரத் மோகன்லால் ரதேஷ்வர், ராஜேந்திர சௌதரி, தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா ஆகிய 5 பேருக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் அரசு தரப்பு தோல்வியடைந்து விட்டது; ஆதலால், அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளிக்கிறேன்' என்றார். இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் பேசியபோது, அஸிமானந்த் தரப்பு வழக்குரைஞர் ஜே.பி. ஷர்மா தெரிவித்தார்.
பத்திரிகையாளர்களுக்கு அனுமதியில்லை: மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் 11 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி, நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நீதிமன்றத்துக்குள் பத்திரிகையாளர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. 
முன்னதாக, இந்த வழக்கில் 10 பேர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களில் அஸிமானந்த் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். சந்தீப் வி டாங்கே, ராமச்சந்திர கல்சாங்க்ரா ஆகிய 2 பேர் தலைமறைவாகி விட்டனர். சுனில் ஜோஷி என்பவர் கொலை செய்யப்பட்டு விட்டார். எஞ்சிய 2 பேர் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சுவாமி அஸிமானந்த், ரதேஷ்வர் ஆகிய 2 பேரும் ஜாமீனில் வெளியே இருந்தனர். எஞ்சிய 3 பேர், ஹைதராபாத் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தனர்.
நீதிபதி திடீர் ராஜிநாமா


மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே. ரவீந்தர் ரெட்டி தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார்.
ஹைதராபாதில் உள்ள கூடுதல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் தனது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை ரவீந்தர் ரெட்டி திங்கள்கிழமை அளித்தார். தனது ராஜிநாமா கடிதத்தில், ''தனிப்பட்ட காரணத்துக்காக பதவியை ராஜிநாமா செய்கிறேன்; மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்குக்கும் எனது ராஜிநாமாவுக்கும் தொடர்பில்லை'' என்றும் ரவீந்தர் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து நீதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நீதிபதி பதவியில் இருந்து விலகுவது குறித்து கடந்த சில நாள்களாகவே ரவீந்தர் ரெட்டி ஆலோசித்து வந்தார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com