ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பு: பாஜக- காங்கிரஸ் பரஸ்பர குற்றச்சாட்டு

ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, பாஜகவும், காங்கிரஸும் பரஸ்பரம் ஒன்றின்மீது ஒன்று குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளன.

ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, பாஜகவும், காங்கிரஸும் பரஸ்பரம் ஒன்றின்மீது ஒன்று குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்து, ஹைதராபாத் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு குறித்து தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
குறிப்பிட்ட ஒரு தரப்பினரை திருப்திப்படுத்த தொடர்ந்து கடைப்பிடித்து வரும் கொள்கைக்காக ஹிந்து மதத்தினருக்கு காங்கிரஸ் அவப்பெயர் ஏற்படுத்தியது. சில வாக்குகளுக்காக இந்த செயலை அக்கட்சி செய்தது. இந்தச் சதி தற்போது வெட்டவெளிச்சமாகி விட்டது. இதுபோல், காங்கிரஸ் கட்சியின் சதி, முன்னெப்போதும் வெட்டவெளிச்சமானது கிடையாது.
வாக்குகளுக்காக ஹிந்துக்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயலில் காங்கிரஸ் கட்சி நீண்டகாலம் ஈடுபட்டு வருகிறது. காவி தீவிரவாதம், ஹிந்து தீவிரவாதம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், சிவ்ராஜ் பாட்டீல், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் பேசியுள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், குறிப்பிட்ட ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சாம்பிட் பத்ரா கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரிடம், இந்தத் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதிலளிக்காமல் சென்று விட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆஸாத் அளித்துள்ள பேட்டியில், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டி, என்ஐஏ அமைப்பின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், '4 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல், அனைத்து வழக்குகளிலும் இதுபோல்தான் தீர்ப்பு வருகிறது; மத்திய விசாரணை அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com