எனக்கு அறிவுரை கூறியது நினைவுள்ளதா? அவ்வப்போது பேசுங்கள் மோடி: மன்மோகன் சிங்

எனக்கு அறிவுரை கூறியதுபோன்று நீங்களுக்கு அவ்வப்போது பேசுங்கள் நரேந்திர மோடி என்று மன்மோகன் சிங் செவ்வாய்கிழமை விமரிசித்துள்ளார்.
எனக்கு அறிவுரை கூறியது நினைவுள்ளதா? அவ்வப்போது பேசுங்கள் மோடி: மன்மோகன் சிங்

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:

ஒருவழியாக இவ்விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது மௌனத்தை கலைத்துவிட்டார். முன்பெல்லாம் பத்திரிகைகளின் அறிக்கைகள் மூலமாக நான் பிரதமராக இருந்தபோது என்னை அவ்வப்போது பேசுமாறு நரேந்திர மோடி அறிவுரை வழங்குவார். தற்போது அந்த அறிவுரையை அவர் பின்பற்றினால் நன்றாக இருக்கும். நரேந்திர மோடி அவர்களே நீங்களும் அவ்வப்போது பேசுங்கள். இதுபோன்ற விவகாரங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் கருத்துக்களை அந்த சமயத்தில் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற தவறுகளை செய்துவிட்டு சுலபமாக தப்பித்துவிடலாம் எனும் மனப்பான்மை பெருகிவிடும் என்றார்.

முன்னதாக, ஒரு நாடாக நாம் இதுபோன்ற சம்பவங்களுக்கு வெட்கப்பட வேண்டும். இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. நிச்சயம் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும். நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com