தவறான தகவல்கள்: மாதச் சம்பளம் பெறுவோருக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை

வருமானவரி கணக்கு செலுத்தும்போது வருமானத்தை குறைத்துக் காட்டுவது, பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை அதிகரிப்பது உள்ளிட்ட தவறான தகவல்களை சமர்ப்பிக்கும்
தவறான தகவல்கள்: மாதச் சம்பளம் பெறுவோருக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை

வருமானவரி கணக்கு செலுத்தும்போது வருமானத்தை குறைத்துக் காட்டுவது, பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை அதிகரிப்பது உள்ளிட்ட தவறான தகவல்களை சமர்ப்பிக்கும் மாதச் சம்பளக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
மேலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அலுவலகத்துக்கு அறிவுறுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. இதுதொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை பெற்று, செயலாற்றும் பெங்களூரில் உள்ள மத்திய செயலாக்க மையத்துறை (சிபிசி) வெளியிட்டுள்ள தனது அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:
வருமான வரி ஆதாயங்களை பெறுவதற்காக தவறான கணக்கை தாக்கல் செய்ய உதவும் நேர்மையற்ற வருமான வரி ஆலோசகர்களின் வலையில் பொதுமக்கள் விழ வேண்டாம். வருமானத்தை குறைத்துக் காட்டுதல், பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை அதிகரித்துக் காட்டுதல் உள்ளிட்ட தவறான செயல்களின் மூலமாக வருமான வரி ஏய்ப்பு செய்வது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய நடவடிக்கைகள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குறியதாகும்.
எனவே, வருமான வரி கணக்குத் தாக்கலில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்படுவதுடன், தாக்கல் செய்யப்படும் கணக்குகளுக்கு திருப்பியளிக்கப்படும் தொகையும் தாமதமாகும். அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் தவறான வருமான வரி தாக்கல் செய்யும் பட்சத்தில், லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
முறைகேடுகளில் ஈடுபடுவோரைக் கண்டறியும் வகையில் விரிவான இடர் ஆய்வு அமைப்பின் மூலமாக வருமான வரி கணக்குத் தாக்கல்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இது, மனிதர்கள் தலையீடு இல்லாத, தானியங்கி அமைப்பாகும். வருமான வரி ஆலோசகர்கள் வருமான வரிச் சட்டத்துக்கு உள்பட்டு, வரி செலுத்துவோருக்கு தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும். மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குநரகம் ஆகியவற்றிடமும் பரிந்துரைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வருமான வரி ஆலோசகர் உதவியுடன் மோசடியாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதை வருமான வரித்துறையின் விசாரணைப் பிரிவு சமீபத்தில் கண்டறித்துள்ள நிலையில் இதுபோன்ற எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த மோசடி விவகாரத்தில் சிபிஐ குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com