லோயா மரணம்: உச்ச நீதிமன்றத்தின் காரசார தீர்ப்பின் முக்கியம்சங்கள்

நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
லோயா மரணம்: உச்ச நீதிமன்றத்தின் காரசார தீர்ப்பின் முக்கியம்சங்கள்


புது தில்லி: நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சொராபுதீன் ஷேக், போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவத்தில், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி பி.எச்.லோயா திடீரென மரணமடைந்தது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அந்த தீர்ப்பில், நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை. இது குறித்து தற்போது நடைபெற்று வரும் நீதிமன்ற விசாரணை தொடரும். சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோருவது, நீதிமன்றத்தின் உண்மைத் தன்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது. நீதித் துறைக்கு எதிரானது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

நீதிபதி பி.எச்.லோயா, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி, நாக்பூரில் நடைபெற்ற தன்னுடன் பணியாற்றுபவரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

குஜராத்தில் சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்தவர் சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா. இந்த வழக்கில் பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய நபர்கள் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.  இதுபோன்ற முக்கிய வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா திடீரென மரணமடைந்தது குறித்து பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகம் எழுப்பப்பட்டது.

85 வயதாகும் லோயாவின் தந்தை இப்போதுவரை நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். மேலும் லோயாவுக்கு எந்த நோயும் கிடையாது. எனவே அவரது மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மும்பை வழக்குரைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் 16-ஆம் தேதி தனது தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று அளித்துள்ளது.

இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறிய முக்கிய அம்சங்கள் :
மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்த மனு மிகவும் அற்பமான, நீதித் துறையின் மீதான நம்பகத் தன்மையை கேள்விக்குறியாக்கும் நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனார்.

இந்த பொது நலன் வழக்கில் துளியும் உண்மையில்லை.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், சட்டத் துறை அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி லோயா இயற்கையான முறையிலேயே மரணம் அடைந்துள்ளார். இதில் எந்த வகையிலும் சந்தேகிக்க இடமில்லை.

நாக்பூருக்கு லோயாவுடன் சென்று விருந்தினர் மாளிகையில்  தங்கியிருந்து, அவருக்கு மாரடைப்பு வந்த போது உடன் இருந்த மூன்று நீதித்துறை அதிகாரிகளையும் இந்த மனு சந்தேகிக்க வைக்கிறது.

நீதிபதி லோயாவின் மரணம் குறித்து விளக்கம் அளித்த 4 நீதிபதிகளின் வாக்குமூலத்தையும் சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை.

நீதித் துறை மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டதா என்று விசாரித்து மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒடுங்கியவர்களுக்கும், கீழ் நிலையில் இருப்போருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பொது நலன் மனுவை தற்போது சிலர் தாங்கள் செய்யும் தொழிலுக்காகவும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடும் பயன்படுத்த ஆரம்பிவித்துவிட்டனர்.

லோயா தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்த போது, நாளிதழ்களும், இதழ்களும், சட்டத் துறையில் முறைகேடு நடப்பது போன்று செய்திகளை வெளியிட்டன.

விளம்பரத்துக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் தொடுக்கப்படும் பொது நலன் மனுக்களை விசாரிப்பதன் மூலம், உச்ச நீதிமன்றம் தனது பொன்னான நேரத்தை வீணடித்து, முக்கிய வழக்குகளில் தீர்ப்பு தாமதமாகக் காரணமாகிறது.

தொழில் வெற்றிக்காகவோ அல்லது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கோ நீதிமன்றம் இடமாகாது. இது சந்தைகளிலோ, தேர்தல்களிலோ தீர்க்கப்பட வேண்டியது என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com