சலுகையை விட்டுக்கொடுத்த மூத்த குடிமக்கள்: ரூ.77 கோடி சேமித்தது ரயில்வே

ரயில் பயணங்கள் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள், கட்டணத்தில் தங்களுக்கான சலுகையை விட்டுக் கொடுத்ததன் மூலமாக 19 மாதங்களில் ரூ.77 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே

ரயில் பயணங்கள் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள், கட்டணத்தில் தங்களுக்கான சலுகையை விட்டுக் கொடுத்ததன் மூலமாக 19 மாதங்களில் ரூ.77 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2016 ஆகஸ்ட் 15 முதல் 2018 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 40 லட்சம் மூத்த குடிமக்கள், ரயில் கட்டணத்தில் தங்களுக்கான சலுகையை 'விட்டுக் கொடுத்தல்' திட்டத்தின் கீழ் விட்டுக் கொடுத்துள்ளனர். அந்த காலகட்டத்தில் இந்திய ரயில்வே ரூ.77 கோடி சேமித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மூத்த குடிமக்கள், தங்களது சலுகை கட்டணம் முழுவதையும் விட்டுக்கொடுக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், 2017 முதல் சலுகை கட்டணத்தில் 50 சதவீதத்தை விட்டுக் கொடுக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், ஆண் பயணிகளில் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர், கட்டணத்தில் 40 சதவீதம் சலுகை பெற இயலும். பெண் பயணிகளில் 58 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர், கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை பெறலாம்.
ரயில் பயணம் மேற்கொள்பவர்களில், பல்வேறு பிரிவிலான பயணிகளுக்கு கட்டணச் சலுகை அளிக்கப்படும் போதிலும், அதைப் பயன்படுத்துபவர்களில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையே அதிகம்.
மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தின் மூலமாக ரயில்வேக்கு ஏற்படும் ரூ.1,300 கோடி மானியச் சுமையை குறைக்கும் விதமாக 'விட்டுக் கொடுத்தல்' திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, லண்டனில் இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடலின்போது, '40 லட்சம் இந்தியர்கள் மூத்த குடிமக்கள் சலுகையை விட்டுக்கொடுத்துள்ளது, சாதாரண குடிமக்களின் தேசப்பற்றை காட்டுகிறது' என்று புதன்கிழமை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இந்திய ரயில்வே இத்தகவலை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com