தமிழகத்துக்கு உரிய நிதியை நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசின் பதினைந்தாவது நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநிலத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாடாளுமன்ற
தில்லியில் மத்திய அரசின் பதினைந்தாவது நிதிக் குழுத் தலைவர் என்.கே. சிங்கை சந்தித்து மனு அளிக்கிறார் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். உடன், மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை, அதிமுக எம்பிக்கள்.
தில்லியில் மத்திய அரசின் பதினைந்தாவது நிதிக் குழுத் தலைவர் என்.கே. சிங்கை சந்தித்து மனு அளிக்கிறார் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். உடன், மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை, அதிமுக எம்பிக்கள்.

தமிழகத்துக்கு உரிய நிதியை மத்திய அரசின் பதினைந்தாவது நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநிலத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர்கள் நிதி குழுத் தலைவர், மத்திய அமைச்சர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். 
பதினைந்தாவது நிதிக் குழுவின் ஆய்வு வரம்பின் மீது தமிழகத்தின் கருத்துகளை வடிவமைப்பதற்காக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்கள் 40 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட காரணத்தால், பதினைந்தாவது நிதிக் குழு ஆய்வு வரம்புகளில் 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பதிலாக, 2011-ஆம் ஆண்டை கருத்தில் கொள்ள வேண்டுமென்ற பரிந்துரை தமிழகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், இது தொடர்பாக பதினைந்தாவது நிதிக் குழுவின் தலைவரை நேரில் சந்தித்து முறையிடுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புதன்கிழமை தில்லி வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வியாழக்கிழமை காலையில் பதினைந்தாவது நிதிக் குழுவின் அலுவலகத்தில் அதன் தலைவர் என்.கே. சிங்கை நேரில் சந்தித்தார். அவருடன் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால் மற்றும் அதிமுக எம்பிக்கள் சென்றனர்.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தை என்.கே. சிங்கிடம் பன்னீர்செல்வம் அளித்தார். மேலும், தமிழகத்துக்கு நிதிக் குழுவின் ஆய்வு வரம்புகள் அமல்படுத்தப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவரிடம் விளக்கினார். இச்சந்திப்பு சுமார் சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது.
பின்னர், மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அவரது அலுவலகத்தில் பன்னீர்செல்வம், அதிமுக எம்பிக்கள் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர். 
இதைத் தொடர்ந்து, பிற்பகலில் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தைச் சந்தித்து எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யாமல் இருக்கும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இதன் பிறகு மாலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அவரது இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது, தமிழகத்துக்கான உரிய நிதியை நிதிக் குழு பகிர்ந்தளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: நிதிக் குழுவின் தலைவரை நேரில் சந்தித்து தமிழகத்துக்கு மத்திய நிதி குழுவில் இருந்து கிடைக்கும் நிதி குறைக்கப்பட்டு வருவது குறித்து எடுத்துரைத்தோம். குறிப்பாக, பதினான்காவது நிதிக் குழுவில் கிட்டத்தட்ட ரூ.7 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்தோம். சரியான நடவடிக்கைகள் காரணமாக மாநிலத்தில் மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கூறினோம்.
தமிழகம் தொடர்ந்து வறட்சி, மழை போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. பேரிடர் மேலாண்மை நிதி போதுமானதாக இல்லை. மத்திய அரசு குறைந்த அளவு நிதியைஅளித்து வருகிறது. அதனால், சொந்த நிதி பயன்படுத்தப்பட்டு வருவதால் தமிழக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும் எடுத்துரைத்தோம். இப்பிரச்னைகளைப் பரிசீலித்து நல்ல முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார் என்றார் பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com