லோக் ஆயுக்தவை உடனடியாக தமிழகம் அமைக்க உத்தரவு 

லோக் ஆயுக்தவை உடனடியாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லோக் ஆயுக்தவை உடனடியாக தமிழகம் அமைக்க உத்தரவு 

லோக் ஆயுக்தவை உடனடியாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல எனவும், நிலவர அறிக்கையை ஜூலை 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி பாஜக செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், லோக் ஆயுக்த சட்டம், 2013-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2014 ஜனவரியில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகளைக் கடந்தும், பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்த உருவாக்கப்படவில்லை. ஆதலால், லோக் ஆயுக்த இல்லாத மாநிலங்களில் அதை ஏற்படுத்தும்படி உத்தரவிட வேண்டும். அதேபோல, பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இருக்கும் லோக் ஆயுக்தவுக்கு போதிய நிதியையும், உள்கட்டமைப்பு வசதியையும் ஏற்படுத்தித் தருவதில்லை. எனவே, லோக் ஆயுக்தவை ஏற்படுத்த போதிய நிதியை பட்ஜெட்டில் மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 23-இல் விசாரணைக்கு வந்தது. அப்போது 'ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், மேகாலயம், மிúஸாரம், நாகாலாந்து, புதுச்சேரி, தமிழகம், தெலங்கானா, திரிபுரா, அருணாசலப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் லோக் ஆயுக்தவை ஏன் ஏற்படுத்தப்படவில்லை என்பதற்கான காரணங்களையும், எப்போது ஏற்படுத்தப்படும் என்பதையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் வழக்குரைஞர் விஜயகுமார் ஆஜராகி, மாநில அரசு அளித்த நிலவர அறிக்கை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, நிலவர அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் வினவினர். இதைத் தொடர்ந்து, நிலவர அறிக்கையை வழக்குரைஞர் வாசித்துக் காண்பித்தார். அதில், 'லோக் ஆயுக்தவை அமைக்க தமிழக அரசு தயாராகவே உள்ளது. ஆனால், மத்திய அரசு லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்காக காத்திருக்கிறோம். அதன் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து லோக் ஆயுக்த உருவாக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆனால், தமிழக அரசின் நிலவர அறிக்கை தொடர்பாக அதிருப்தி அடைந்த நீதிபதிகள், 'மத்திய அரசுக்கும் லோக் ஆயுக்தவுக்கும் தொடர்பில்லை, மத்திய அரசு லோக்பால் அமைப்பதற்காக ஏன் காத்திருக்கிறீர்கள்? உங்களால் சுயமாக முடிவு எடுக்க முடியாதா ? காலம் தாழ்த்தாமல் லோக் ஆயுக்த அமைக்க வேண்டும். அதற்கான பணியை உடனே (இன்றே) தொடங்க வேண்டும். இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல. லோக் ஆயுக்தவை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த நிலவரஅறிக்கையை ஜூலை 10-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு மேல் அவகாசம் அளிக்க மாட்டோம்' எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

தமிழக அரசு... 
லோக் ஆயுக்தவை அமைக்க தமிழக அரசு தயாராகவே உள்ளது. ஆனால், மத்திய அரசு லோக்பால் அமைப்பை உருவாக்குவதற்காக காத்திருக்கிறோம். அதன் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து லோக் ஆயுக்த உருவாக்கப்படும்.

நீதிபதிகள்...
மத்திய அரசுக்கும் லோக் ஆயுக்தவுக்கும் தொடர்பில்லை, மத்திய அரசு லோக்பால் அமைப்பதற்காக ஏன் காத்திருக்கிறீர்கள்? அதற்கான பணியை உடனே தொடங்க வேண்டும். இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com