லோயா மரணம் தொடர்பான மனுக்கள் பின்னணியில் ராகுல் காந்தி: பாஜக தாக்கு

நீதிபதி லோயாவின் மரணம் குறித்து விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பின்னணியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

நீதிபதி லோயாவின் மரணம் குறித்து விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பின்னணியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா, இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
லோயா மரணம் குறித்து விசாரணை கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர், குடியரசுத் தலைவரை சந்தித்து, லோயா மரணம் குறித்து விசாரணை கோரினர்.
இதிலிருந்து லோயா மரணம் குறித்து விசாரணை கோரி தொடுக்கப்பட்ட மனுக்கள் பின்னணியில் ராகுல் காந்தி இருந்தது தெரிகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு அவப் பெயர் ஏற்படுத்துவதற்கு நீதித்துறையை பயன்படுத்த ராகுல் காந்தி முயன்றதும் வெட்டவெளிச்சமாகிறது.
அமித் ஷா, இந்திய நீதித்துறை, ஜனநாயகம் ஆகியவற்றுக்கு எதிராக சதியில் ஈடுபட்டதற்கு ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும். இந்தச் செயலுக்காக ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும். ஆட்சிக்கு வர முடியாமல் தோல்வியடைந்த காரணத்தினால், காங்கிரஸ் கட்சி அனைத்து வகையிலான சதிகளிலும் ஈடுபட்டுள்ளது. தனது அரசியல் திட்டங்களுக்காக நீதித்துறையை பயன்படுத்த காங்கிரஸ் முயன்றுள்ளது. இது இந்திய அரசியலில் மிகவும் கீழான செயலாகும்.
உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் கொடுத்த பின்னணியில் இருக்கும் மாயக் கைகள், ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் கரங்கள் ஆகும். தேர்தல் களத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக தலைவர் அமித் ஷாவையும் காங்கிரஸால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால், அரசியல் பகைமைக்கு பழிதீர்த்துக் கொள்வதற்கு நீதிமன்றத்தில் அவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர் என்று சாம்பிட் பத்ரா கூறினார்.
ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத் கருத்து: மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் கூறுகையில், 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக, நீதித்துறையை தவறான பாதையில் வழிநடத்த முடியாது என்பது தீர்ப்பின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள உத்தரப் பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத், 'தனது குடும்பத்தினர் அல்லாத யாரும் நாட்டை ஆட்சி செய்யக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரும்புகிறார்; காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு பகிரங்கப்படுத்தி விட்டது' எனத் தெரிவித்தார். 
சுயநல நோக்கத்துடன் தொடுக்கப்பட்ட மனுக்கள்-முகுல் ரோத்தகி: இதனிடையே, லோயா மரணம் குறித்து விசாரணை கோரி தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'சுயநல நோக்கங்களுடனும், மத்திய அரசின் செயல்பாடு மீது தாக்குதல் தொடுக்கும் எண்ணத்துடனும் அந்த மனுக்கள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை வரவேற்கிறேன்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com