பயங்கரவாத ஆதரவு நாடுகள் மீது கடும் நடவடிக்கை: சர்வதேச அரங்கில் இந்தியா வலியுறுத்தல்

பயங்கரவாதத்தை வேரறுப்பது மட்டுமன்றி, அதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அரங்கில் வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு முன்பு, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை செவ்வாய்க்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு முன்பு, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை செவ்வாய்க்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

பயங்கரவாதத்தை வேரறுப்பது மட்டுமன்றி, அதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச அரங்கில் வெளியுறவுத் துறை சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானை மறைமுறைமாகச் சாடும் வகையில் இத்தகைய கருத்தை அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா ஸ்வராஜ் சீனாவுக்குச் சென்றுள்ளார்.
அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்து எடுத்துரைத்தார். குறிப்பாக, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அத்துமீறல்களை மறைமுகமாகக் குறிப்பிட்ட சுஷ்மா, அத்தகைய செயல்பாடுகளை ஒருங்கிணைந்து களைய வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில், சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சுஷ்மா பேசியதாவது:
இன்றைய நவ நாகரிக உலகம், ஒருபுறம் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து வருகிறது; அதேவேளையில், மறு புறம் பல சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. அவற்றில் முக்கியமானதும், முதன்மையானதுமாக இருக்கக் கூடிய சவால் பயங்கரவாதம். அத்தகைய மனிதாபிமானமற்ற சமூக விரோத நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தல்களாக விளங்கி வருகின்றன.
பயங்கரவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் பறிப்பதில்லை. மாறாக, மக்களின் வாழ்க்கை, பொது அமைதி, நாட்டின் வளம் உள்பட அனைத்தையும் பறிக்கிறார்கள். ஆகவே, பயங்கரவாதம் என்பது அனைத்து தரப்பினருக்கும் பிரதான எதிரியாக உள்ளது.
பிற நாட்டு எல்லைக்குள் ஊடுருவி சதித் திட்டங்களை நிகழ்த்துவது மட்டுமே பயங்கரவாதிகளின் இலக்கு எனக் கருதக் கூடாது. சர்வதேச நாடுகளின் ஸ்திரத்தன்மையையே சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் அவர்களது முக்கிய எண்ணம். மக்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களை ஒருவிதமான அச்சத்தில் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என பயங்கரவாதிகள் திட்டமிடுகின்றனர்.
அத்தகைய முயற்சிகளை வேரறுப்பதோடு மட்டுமன்றி, அவர்களுக்கு புகலிடமும், பண உதவியும், பயிற்சியும் அளிக்கும் நாடுகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கித்தான் உலக நாடுகள் அனைத்தும் செயல்பட்டு வருகின்றன என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உள்ளது.
மேலும், வேறுபாடுகளை மறந்து இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஓரணியாகத் திரள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது. அதற்கு தகுந்தாற்போல பயங்கரவாத ஒழிப்பில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் காட்டி வரும் ஆர்வமும், பங்களிப்பும் வரவேற்கத்தக்கது.
சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், விரிவான செயல்திட்ட ஒப்பந்தத்தை உலக நாடுகளுக்கு இடையே மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. சபையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா வலியுறுத்தியது. ஆனால், இன்று வரை அத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.
அதேபோன்று, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலைப் பொருத்தவரை, பயங்கரவாதம் தொடர்பான சவால்களை சில தருணங்களில் எதிர்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. அதற்கு ஒரே காரணம் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததுதான். அதுதொடர்பான கோரிக்கையையும் இந்தியா நீண்ட காலமாக முன்வைத்து வருகிறது. இதுவரை, அதன்பேரில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளாத வரை பயங்கரவாத பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலாது. என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com