கூட்டுறவு சங்கத் தேர்தல்: தமிழக அரசின் மனு தள்ளுபடி

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் விளக்கம் கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
கூட்டுறவு சங்கத் தேர்தல்: தமிழக அரசின் மனு தள்ளுபடி

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் விளக்கம் கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
 இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 20-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, "தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். இருப்பினும், இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது. இது தொடர்பாக, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர், எதிர் மனுதாரர் ஆர். சக்கரபாணி உள்ளிட்டோர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
 இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக விளக்கம் கோரி தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 இந்த மனு தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தமிழக கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் சார்பில் வழக்குரைஞர் அபய் குமார், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சார்பில் வழக்குரைஞர் வினோத் கண்ணா ஆகியோர் புதன்கிழமை முறையிட்டனர். அப்போது, "கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது. ஆனால், முடிவுகளை அறிவிக்க தடைவிதித்துள்ளது. அதே நேரத்தில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி வைத்துக் கொள்ளலாமா என்பது குறித்து விளக்கம் தேவை' எனக் கோரினர்.
 இதற்கு நீதிபதிகள், "கூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் விளக்கம் தேவையில்லை. எனவே, விளக்கம் கோரும் இடைக்கால மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' எனத் தெரிவித்தனர்.
 பின்னணி: தமிழக கூட்டுறவுச் சங்கத் தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் சட்டப்பேரவை திமுக கொறடா ஆர்.சக்கரபாணி மனு தாக்கல் செய்தார். அதில், "ஆளும் கட்சியினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களது கட்சியைச் சார்ந்தவர்களை மட்டுமே கூட்டுறவு சங்கப் பதவிகளுக்கு தேர்வு செய்து வருவதால் கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
 இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ஏப்ரல் 12-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், "கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக வேட்பு மனுக்களை வாங்கவோ, வேட்பு மனுக்களை பரிசீலிக்கவோ, அடுத்தகட்ட தேர்தல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவோ கூடாது என்று ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், சட்டப்பேரவை திமுக கொறடா ஆர்.சக்கரபாணி சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com