தேர்தல் வாய்ப்புக் கிடைக்காததால் கட்சி தாவும் பிரமுகர்கள்!

கொள்கைகள் எங்களுக்குப் பொருட்டல்ல; வாய்ப்புக் கிடைத்தால் போதும் எங்கள் கரை வேட்டிகளைக் கண நேரத்தில் கலைத்துவிட்டு,
தேர்தல் வாய்ப்புக் கிடைக்காததால் கட்சி தாவும் பிரமுகர்கள்!

கொள்கைகள் எங்களுக்குப் பொருட்டல்ல; வாய்ப்புக் கிடைத்தால் போதும் எங்கள் கரை வேட்டிகளைக் கண நேரத்தில் கலைத்துவிட்டு, வேறு கட்சிகளில் இணைந்துவிடுவோம் என்பதற்கேற்ப கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலர் மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
 மக்களவை, சட்டப்பேரவை என்றில்லை, அது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், போட்டியிட வாய்ப்புத் தராவிடில், இரவோடு இரவாக கட்சி, கொள்கை, தலைவர்களை மாற்றிக் கொள்ளும் போக்கு அரசியல்வாதிகளிடையே பரவலாகக் காணப்படுகிறது.
 நேற்றுவரை ஒரு கட்சியையும், அதன் தலைவரையும் கொண்டாடிப் பேசிய அரசியல்வாதி, தேர்தல் வாய்ப்பு மறுக்கப்பட்டதும் மறுகணமே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எதிர்வாதம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
 இந்தப் போக்கு இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளிடையேயும் காணப்படுகிறது. இதை நியாயப்படுத்தும் வகையில், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை என்பது தத்துவம். இதுபோன்ற போக்குகள் அரசியல்வாதிகள் மீதான நம்பகத் தன்மையை முழுமையாக சிதைத்து விட்டிருப்பதை மறுக்க இயலாது.
 கட்சிவிட்டு கட்சி தாவும் போக்கு கர்நாடகத்தில் நாள்பட்ட வியாதி போல நிலையாக இருந்துவருகிறது. நேற்று வரை சித்தராமையாவின் ஆட்சியைப் புகழ்ந்து பேசியவர், மறுதினம் எடியூரப்பாவின் ஆட்சி வந்தால் என்னென்ன நன்மைகள் வாய்க்கும் என்று பேசுவதுடன், சித்தராமையா குறித்து விமர்சிக்க மறப்பதில்லை.
 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை வரை கட்சியின் வேட்பாளர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாமல் தொண்டர்கள் தவித்ததைக் காண முடிந்தது.
 கர்நாடகத்தில் கட்சி தாவும் போக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. 3 மாதங்களுக்கு முன்பே மஜதவில் இருந்து விலகிய 7 எம்எல்ஏக்கள், தங்களை காங்கிரஸில் ஐக்கியமாக்கிக் கொண்டதோடு, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் உறுதி செய்துகொண்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதும் கட்சித் தாவுவது தீவிரமடையத் தொடங்கியுள்ளது.
 காங்கிரஸ்
 மஜதவைச் சேர்ந்த ஜமீர் அகமது, அகண்ட சீனிவாஸ்மூர்த்தி, என்.செலுவராயசாமி, பீமாநாயக், இக்பால் அன்சாரி, ரமேஷ் பண்டிசித்தே கெளடா, எச்.சி.பாலகிருஷ்ணா, பாஜகவை சேர்ந்த ஆனந்த்சிங், ஏ.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக மக்கள் கட்சியைச் சேர்ந்த அசோக்கெனி, கர்நாடக ஜனதா கட்சியைச் சேர்ந்த பி.ஆர்.பாட்டீல், சுயேச்சைகளான எஸ்.என்.சுப்பாரெட்டி, ஜி.மஞ்சுநாத், எம்.சுப்பாவைத்யா, சதீஷ்கிருஷ்ண செய்ல், பி.நாகேந்திரா ஆகிய 21 எம்.எல்.ஏ.க்கள், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. பேளூரு கோபாலகிருஷ்ணா உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
 பாஜக
 காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாலிகையா குத்தேதார், ஏ.எஸ்.பாட்டீல் நாடஹள்ளி, சி.பி.யோகேஸ்வர், மஜதவைச் சேர்ந்த மானப்பா வஜ்ஜல், சிவராஜ் பாட்டீல், மல்லிகார்ஜுன் கூபா ஆகிய 6 எம்எல்ஏக்கள், சுயேச்சை எம்.எல்.சி. பசன கெளடா பாட்டீல் யத்னல், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குமார் பங்காரப்பா, என்.எல்.நரேந்திரபாபு, மஜதவின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுனில் ஹெக்டே, தினகர் ஷெட்டி, முன்னாள் மஜத எம்.எல்.ஏ. பரிமளா நாகப்பா, அக் கட்சியின் முன்னணித் தலைவர் பிரீத்தம் நாகப்பா, காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் பசவராஜ் பாட்டீல் அன்வாரி, நாகப்பா சலோனி ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
 மஜத
 முன்னாள் காங்கிரஸ் தலைவர் எச்.விஸ்வநாத், பாஜக முன்னாள் அமைச்சர்கள் ரேவுநாயக் பெலமகி, ஆனந்த் அஸ்னோதிகர், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் கண்ட்ரே, ஜி.எச்.சீனிவாஸ், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பிரசன்னகுமார், காங்கிரஸ் முன்னணித் தலைவர்கள் பிரபாகர் ரெட்டி, பி.ரமேஷ், அல்தாப்கான், சசிகுமார், பாஜக முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜி.எச்.ராமசந்திரா, ஆர்.எம்.மஞ்சுநாத் கெளடா, பாஜக முன்னணித் தலைவர் ஸ்ரீதர் ரெட்டி உள்ளிட்டோர் மஜதவில் இணைந்துள்ளனர்.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com