மம்தா சூர்ப்பனகை; காங்கிரஸ் ராவணன்: உ.பி. பாஜக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு

மம்தா பானர்ஜி சூர்ப்பனகை; காங்கிரஸ் கட்சி ராவணன் என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மம்தா பானர்ஜி சூர்ப்பனகை; காங்கிரஸ் கட்சி ராவணன் என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 "கட்சியினர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' என்று பிரதமர் நரேந்திர மோடி ஓரிரு நாள்களுக்கு முன்புதான் பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், பாஜக எம்எல்ஏ ஒருவர் இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தும் பேசியுள்ளார். ராமாயணத்தில் இலங்கை வேந்தன் ராவணன், அவரது சகோதரி சூர்ப்பனகை ஆகியோர் எதிர்மறையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதனை மேற்கோள்காட்டியே பாஜக எம்எல்ஏ பேசியுள்ளார்.
 உத்தரப் பிரதேச மாநிலம் பலியா தொகுதி எம்எல்ஏவான சுரேந்திர சிங், இப்போதுதான் முதல்முறையாக சட்டப் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
 பாஜக ஆளும் மாநிலத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பலர் இப்போது மேற்கு வங்கத்துக்கு சென்றுவிட்டனர். அந்த மாநிலத்தில் அவர்களுக்கு உரிய சுதந்திரம் கிடைப்பதுதான் அதற்குக் காரணம். மேற்கு வங்கம் விரைவில் மற்றொரு ஜம்மு-காஷ்மீராக மாறிவிடும். அங்கு மம்தா பானர்ஜி, சூர்ப்பனகையாக உள்ளார். காங்கிரஸ் கட்சி ராவணன் போல திகழ்கிறது.
 வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்தில் ஊடுருவும் பயங்கரவாதிகள், ஹிந்துக்களைக் குறிவைத்துத் தாக்குகின்றனர். அங்கு ஹிந்துக்கள் துன்புறுத்தப்படுவதை மம்தா பானர்ஜி வேடிக்கை பார்த்து வருகிறார். நல்லவேளையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இருக்கிறார். அடுத்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமையும். அப்போது, அங்குள்ள பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள். மேற்கு வங்கத்தின் சூர்ப்பனகையை (மம்தா) மோடியும், அமித் ஷாவும் வெல்வார்கள் என்றார்.
 முன்னதாக, 2022-ஆம் ஆண்டு இந்தியாவில் ஹிந்து ராஜ்ஜியம் அமையும் என்று பேசியதன் மூலம் சுரேந்திர சிங் எதிர்ப்பை சந்தித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com