வெறுப்பூட்டும் பேச்சு: 15 எம்.பி.க்கள், 43 எம்எல்ஏக்கள் மீது வழக்கு

வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக தங்களுக்கு எதிராக வழக்குகள் இருப்பதாக நடப்பு எம்.பி.க்கள் 15 பேர் மற்றும் எம்எல்ஏக்கள் 43 பேர் தெரிவித்துள்ளனர்.

வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக தங்களுக்கு எதிராக வழக்குகள் இருப்பதாக நடப்பு எம்.பி.க்கள் 15 பேர் மற்றும் எம்எல்ஏக்கள் 43 பேர் தெரிவித்துள்ளனர்.
 இதுதொடர்பாக, தில்லியைச் சேர்ந்த ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம் (ஏடிஆர்), தேசிய தேர்தல் கண்காணிப்பு (என்இடபிள்யு) என்ற அமைப்புடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டது.
 எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடும்போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளதாவது:
 வெறுக்கத்தக்க வகையில் பேசியதாக தங்களுக்கு எதிராக வழக்குகள் இருப்பதாக நடப்பு மக்களவை எம்.பி.க்கள் 15 பேரும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 43 பேரும் தெரிவித்துள்ளனர். எனினும், மாநிலங்களவை எம்.பி.க்கள் எவரும் அதுபோன்ற தகவலை அளிக்கவில்லை.
 அந்த 15 எம்.பி.க்களில், 10 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்களாவர். எஞ்சிய 5 பேர் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாட்டாளி மக்கள் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் -ஏ-இட்டெஹாதுல் முஸ்லிமீன், சிவ சேனை ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களாவர்.
 அதேபோல் 43 எம்எல்ஏக்களில், 17 பேர் பாஜகவையும், 5 பேர் தெலங்கானா ராஷ்டிர சமிதியையும், 5 பேர் அகில இந்திய மஜ்லிஸ் -ஏ-இட்டெஹாதுல் முஸ்லிமீனையும் சேர்ந்தவர்களாவர்.
 மேலும், தெலுங்கு தேசம் கட்சியில் 3 பேர், இந்திய தேசிய காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சிவ சேனை ஆகியவற்றில் தலா 2 பேர் மீது இந்த வழக்குகள் உள்ளன. இதுதவிர, திராவிட முன்னேற்ற கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சிகளில் தலா ஒருவர் மீதும், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் மீதும் இந்த வழக்குகள் உள்ளன.
 மாநிலங்கள் வாரியாக எடுத்துக்கொண்டால், உத்தரப் பிரதேசத்தில் 15 எம்.பி.க்கள், 9 எம்எல்ஏக்கள் மீதும், தெலங்கானாவில் 2 எம்.பி.க்கள், 11 எம்எல்ஏக்கள் மீதும், கர்நாடகத்தில் 2 எம்.பி.க்கள், 3 எம்எல்ஏக்கள் மீதும், மகாராஷ்டிரத்தில் ஒரு எம்.பி., 4 எம்எல்ஏக்கள் மீதும் இந்த வழக்குகள் உள்ளன.
 பிகாரில் 4 எம்எல்ஏக்கள், ஆந்திரப் பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கத்தில் தலா 2 எம்எல்ஏக்கள், குஜராத், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜார்க்கண்டில் தலா ஒரு எம்எல்ஏக்கள் மீது இவ்வழக்கு உள்ளது.
 கட்சித் தலைவர்களாக எடுத்துக் கொண்டால், அகில இந்திய மஜ்லிஸ் -ஏ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அஸாதுதின் ஒவைசி, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பத்ருதின் அஜ்மல் ஆகியோர் மீது வெறுக்கத்தக்க வகையில் பேசியதாக வழக்குகள் உள்ளன.
 மேலும் அமைச்சர்களாக குறிப்பிடுவதென்றால், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் உமா பாரதி மீதும், மாநில அமைச்சர்கள் 8 பேர் மீதும் இந்த வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
 கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களில் போட்டியிட்டவர்களில் 198 வேட்பாளர்கள் மீது இந்த வழக்கு உள்ளது. அதே காலகட்டத்தில் அதே தேர்தல்களில் போட்டியிட்டதாக சுயேச்சை வேட்பாளர்கள் 28 பேர் மீது வழக்கு உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுபோன்ற வழக்குகளை சந்திப்பவர்களுக்கு, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கட்சிகள் வழங்கக் கூடாது எனவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com