ஆதார் - பான் இணைப்பால் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் வாதம்

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்கவோ, கருப்புப் பணப் பதுக்கலை ஒழிக்கவோ முடியாது

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்கவோ, கருப்புப் பணப் பதுக்கலை ஒழிக்கவோ முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அதன் வாயிலாக நீரவ் மோடி உள்ளிட்ட பெரு நிறுவன அதிபர்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்ததைத் தடுக்க முடிந்ததா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
 பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் உதவிகள் பெற ஆதாரைக் கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இது மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும், தனிநபர் சுதந்திரத்துக்குப் புறம்பான நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
 இதுதொடர்பாக, பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க அரசு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவற்றை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
 இந்நிலையில், அதன் மீதான விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சங்கரநாராயணன் வாதிட்டதாவது:
 பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தனி நபர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதேவேளையில், பெரு நிறுவனங்களும், போலி நிறுவனங்களும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வருவதில்லை. கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும்; பொருளாதார மோசடிகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்தது என்றால், தனிநபர்களிடம் ஆதாரையும், பான் எண்ணையும் இணைக்குமாறு கூறுவதில் எந்தப் பயனுமில்லை.
 வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்க ஆதாரால் முடியாது. நீரவ் மோடி உள்பட சமீப காலத்தில் நடைபெற்ற பல்வேறு பொருளாதாரக் குற்றங்கள் எதையும் ஆதார் - பான் இணைப்பால் முறியடிக்க இயலவில்லை என்றார் அவர்.
 இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மக்களுக்கு மானிய உதவிகள் வழங்குவதிலும், நலத் திட்டங்கள் அளிப்பதிலும் முறைகேடு ஏற்படாமல் தடுப்பதற்காக ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com