கதுவா வழக்கு: நியாயமான விசாரணை நடைபெறாவிட்டால் வேறு இடத்துக்கு மாற்றப்படும்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலை செய்யப்பட்ட வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்;
கதுவா வழக்கு: நியாயமான விசாரணை நடைபெறாவிட்டால் வேறு இடத்துக்கு மாற்றப்படும்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலை செய்யப்பட்ட வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும்; அவ்வாறு நடைபெறாது என்ற சந்தேகம் எழுந்தால் கதுவா மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து வேறு இடத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்படும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேற்கண்டவாறு கூறினர்.
 முன்னதாக, கதுவா மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து வேறு இடத்துக்கு வழக்கு விசாரணையை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 இதேபோல், குற்றம்சுமத்தப்பட்ட நபர்களுக்கு எதிராக கதுவா நீதிமன்றத்தில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது மாவட்ட வழக்குரைஞர்கள் சங்கத்தினர் தடை ஏற்படுத்தியதாகப் புகார் எழுந்தது.
 இதுகுறித்து பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் பிசிஐ தாக்கல் செய்தது.
 அந்த அறிக்கையில், "கதுவா நீதிமன்றத்தில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை வழக்குரைஞர் சங்கம் தடுக்கவில்லை. இதேபோல், பாதிக்கப்பட்ட தரப்பினரின் வழக்குரைஞரான தீபிகா சிங் ரஜாவத், சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைக்காக ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு அவர்கள் (வழக்குரைஞர் சங்கம்) தடை ஏற்படுத்தவில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.
 "இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பினரும், கதுவா மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தினரும் கோரிக்கை வைத்துள்ளதை ஏற்றுக் கொள்ளலாம் என்றே தோன்றுகிறது'' எனவும் பிசிஐ தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.
 அப்போது, ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷோயப் ஆலம், பிசிஐ தாக்கல் செய்திருக்கும் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். குற்றப்பத்திரிகை தாக்கலில் ஏற்பட்ட தடை குறித்து சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளின் கருத்து இடம்பெறாத நிலையில் பிசிஐ-யின் அறிக்கை நம்பத்தகுந்ததாக இல்லை என ஷோயப் ஆலம் தெரிவித்தார்.
 விசாரணை அதிகாரிகளுக்கும், நீதிமன்ற நிர்வாக அமைப்புக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது என்பதை உயர் நீதிமன்ற அறிக்கையும், கதுவா மாவட்ட நீதிபதி ஒருவர் அளித்த அறிக்கையும் உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார்.
 அதேவேளையில், கதுவா மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து வழக்கை மாற்றக் கோரும் மனு, வழக்குரைஞர் சங்கத்தினரின் அத்துமீறிய செயலைக் கண்டிக்கும் மனு ஆகிய இரண்டையும் வெவ்வேறாக கருத வேண்டும் எனவும் மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
 இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: வழக்கின் முக்கிய நோக்கம் தவறிப் போகாது. நியாயமான விசாரணை நடைபெறும். குற்றம்சுமத்தப்பட்ட நபர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆகிய இருதரப்புக்கும் முறையான சட்ட ஆலோசனைகள் மற்றும் பிரதிநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
 பிசிஐ அறிக்கை என்ன சொல்கிறது, வழக்குரைஞர் அமைப்பினர் என்ன சொல்கின்றனர் என்பதையெல்லாம் கவனிப்பதைவிட, உண்மையான நோக்கத்தில் (நியாயமான விசாரணை) இருந்து நாம் திசைமாறி விடக் கூடாது என்பதே முக்கியமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 அதேவேளையில், வழக்குரைஞர்கள் மீது தவறு இருக்குமானால், அவர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படுவர் என்றும் நீதிபதிகள் கூறினர்.
 "கோரிக்கை பரிசீலிக்கப்படும்''
 கதுவா வழக்கில் சிபிஐ விசாரணை கோரி, குற்றம்சாட்டுக்கு ஆளாகியுள்ள எட்டு நபர்களில் இருவர் தாக்கல் செய்த மனு, பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
 அப்போது, வழக்கை விரைவாக விசாரிப்பது என்பது, குற்றம்சுமத்தப்பட்ட நபர்களுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் தங்கள் வாதங்களை எடுத்துரைக்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என அர்த்தம் அல்ல என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com