காஷ்மீரில் பாக். ராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள கிராமங்களிலும், பாதுகாப்புச் சாவடிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள கிராமங்களிலும், பாதுகாப்புச் சாவடிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
 இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
 சுந்தர்பானி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடருகே வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். எல்லைப் பகுதி அருகே உள்ள கிராமங்களிலும், பாதுகாப்புச் சாவடிகளிலும் அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்திய ராணுவ வீரர்கள் சுதாரித்துக் கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு உரிய பதிலடி கொடுத்தனர். சுமார் 11 மணி வரை துப்பாக்கிச் சண்டை நீடித்தது என்ற அந்த அதிகாரி தெரிவித்தார்.
 இந்த ஆண்டு இதுவரை 650 தடவை பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 16 ராணுவ வீரர்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
 பாகிஸ்தானியர் 2 பேர் பலி: இதனிடையே, இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
 அந்நாட்டு வெளியுறவுத் துறை அலுவலக செய்தித்தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறுகையில், "எல்லைக் கட்டுப்பாடு கோட்டருகே உள்ள பிரம்லா என்ற கிராமத்தில் இந்திய ராணுவத்தினர் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்துவிட்டனர். பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com