நீதிபதி ஜோசப் நியமனம்: கொலீஜியம் பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு

உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, கொலீஜியம் (நீதிபதிகள் நியமனக் குழு) அளித்த பரிந்துரையை மத்திய அரசு வியாழக்கிழமை நிராகரித்தது.
நீதிபதி ஜோசப் நியமனம்: கொலீஜியம் பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு

உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, கொலீஜியம் (நீதிபதிகள் நியமனக் குழு) அளித்த பரிந்துரையை மத்திய அரசு வியாழக்கிழமை நிராகரித்தது.
 இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்துக்கு மத்திய அரசு கூறியுள்ளது. இதன் மூலம் நீதித்துறைக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான அதிருப்தி மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ராவை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் வழக்குரைஞராக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமையை இந்து மல்ஹோத்ரா பெற்றுள்ளார்.
 முன்னதாக, இந்து மல்ஹோத்ரா, கே.எம்.ஜோசப் ஆகியோரது பெயர்களை உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்தது.
 காரணம் என்ன? கே.எம். ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு அனுமதிக்காததற்கு அரசியல் காரணங்களே பின்னணியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016-ஆம் உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது. அப்போது இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜோசப், குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து, மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை தொடர உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதன் காரணமாகவே உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப்பை அமர்த்த மத்திய அரசு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
 முன்னதாக, இந்த நியமனங்கள் தொடர்பாக மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு வியாழக்கிழமை ஒரு கடிதம் எழுதினார். அதில், "மூத்த வழக்குரைஞர் இந்து மல்ஹோத்ரா, வியாழக்கிழமையே உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். அதே நேரத்தில், ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
 உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக யாரை நியமிப்பது என்ற பரிந்துரையை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 மோடியின் பழிவாங்கும் நடவடிக்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
 நாட்டின் மிகமூத்த நீதிபதியான ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு மறுத்தது, பிரதமர் மோடியின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 இது தொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:
 முன்னெப்போதும் இல்லாத வகையில் நீதித்துறையின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் தாங்கள் அமல்படுத்திய குடியரசுத் தலைவர் ஆட்சியை அப்புறப்படுத்தினார் என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதி ஜோசப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்பை அளிக்க மோடி மறுத்துவிட்டார். நமது நாட்டில் உள்ள நீதிபதிகளில் மிகவும் மூத்தவர் நீதிபதி ஜோசப். மத்திய அரசின் அராஜகத்தை எதிர்த்து சரியான தீர்ப்பை வழங்கிய காரணத்துக்காக நீதிபதி ஜோசப்பை மோடி பழிவாங்கியுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 இடதுசாரிகள் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com