ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவை மாற்றம்: கதுவா பாஜக உறுப்பினருக்கு அமைச்சர் பதவி

ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவை மாற்றம்: கதுவா பாஜக உறுப்பினருக்கு அமைச்சர் பதவி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அமைச்சரவை திங்கள்கிழமை மாற்றியமைக்கப்பட்டது. இதில் கதுவா பகுதி பாஜக உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி, பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக பிடிபி கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்ளார். அதிகபட்சம் முதல்வர் உட்பட 25 பேர் இடம்பெறக்கூடிய அமைச்சரவையில் பிடிபி 14 அமைச்சர்களையும், பாஜக 11 அமைச்சர்களையும் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த கூட்டணி ஆட்சி ஏற்பட்ட 3 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதில் துணை முதல்வராக இருந்த நிர்மல் சிங், பேரவைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கவிந்தர் குப்தா துணை முதல்வராகப் பதவி ஏற்றார்.

ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோஹ்ரா முன்னிலையில் நடைபெற்ற இந்த புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ், மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த புதிய அமைச்சரவையில் கதுவா பகுதி பாஜக எம்.எல்.ஏ ராஜீவ் ஜஸ்ரோடியா இடம்பெற்றுள்ளார். அதுபோல பிடிபி புலவாமா எம்.எல்.ஏ முகமது கலீல் பந்த், பாஜக மாநிலத் தலைவர் சத்பால் ஷர்மா, சோன்வார் பகுதி பாஜக எம்.எல்.ஏ முகமது அஷ்ரஃப் மிர், சாம்பா எம்.எல்.ஏ தேவேந்தர் குமார் மன்யால், தோடா பகுதி பாஜக எம்.எல்.ஏ சக்தி ராஜ் ஆகியோர் இடம்பெற்றனர்.

பழைய அமைச்சரவை சிறப்பாக செயலாற்றியது. தற்போது புதிய அணி உருவாகியுள்ளது. இதில் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களும் நிச்சயம் சிறப்பாக செயலாற்றுவார்கள் என நம்புகிறேன் என்று பிடிபி கட்சித் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய கூட்டணி அரசு அமைந்து 3 ஆண்டுகள் முழுமையடைந்துள்ளது. எனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பாக விவாதித்தோம். இதனால் எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் அமைச்சரவை தொடர்பான அனுபவம் ஏற்படும். இதில் பாஜக சார்பில் 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர் என பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com