இந்தியாவின் 16 மாநிலங்களின் நிலத்தடி நீரில் கலந்துள்ள யுரேனியம்: அதிரவைக்கும் அறிக்கை 

இந்தியாவின் 16 மாநிலங்களின் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேலாக யுரேனியம் கலந்திருப்பதை, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
இந்தியாவின் 16 மாநிலங்களின் நிலத்தடி நீரில் கலந்துள்ள யுரேனியம்: அதிரவைக்கும் அறிக்கை 

புது தில்லி: இந்தியாவின் 16 மாநிலங்களின் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மேலாக யுரேனியம் கலந்திருப்பதை, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் திங்களன்று கேள்வி நேரத்தின் பொழுது துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து நீர் ஆதாரங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை நதி புத்துயிர்ப்புத் துறை இணை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது:

உலக சுகாதார நிறுவனத்தின் சார்பாக "இந்திய நிலத்தடி நீர் ஆதாரங்களில் அதிக அளவிலான யுரேனிய கலப்பு' என்னும் தலைப்பிட்ட அறிக்கையானது, "சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கடிதங்கள் 2018" என்னும் இதழில் வெளியாகியுள்ளது.அதில் இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் கிடைக்கும் நிலத்தடி நீர் ஆதாரங்களில் யுரேனிய கலப்பானது,  உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட லிட்டருக்கு 30 மைக்ரோ க்ராம் என்னும் அளவினை விட அதிக அளவில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் குடிநீருக்கு என பராமரிக்கப்படும் தர நிர்ணய அளவான IS-10500: 2012  என்பது யுரேனியம் உள்ளிட்ட கதிரியக்க பொருட்களுக்கான அளவீட்டினையும் கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவில் அத்தகைய எந்த கதிரியக்க பொருட்களும் தரக் கட்டுப்பாட்டு  சோதனைகளில் கண்டறியப்படவில்லை.

2014-இல் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் சார்பில் 'தேசிய யுரேனிய திட்டம்' என்னும் தலைப்பில் நடந்த ஆய்வின் படி, 10000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 2 மாதிரிகளில் மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அளவினை விட அதிக அளவில் காணப்பட்டது.

ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ,உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா, சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் , தெலங்கானா மற்றும் குஜராத் ஆகியவை அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மாநிலங்களாகும்.

இவ்வாறு அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com