இடஒதுக்கீடு இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை - பிரதமர் மோடி

இடஒதுக்கீடு இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

இடஒதுக்கீடு இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்யேத பேட்டியளித்தார். அந்த பேட்டியில் என்ஆர்சி, இடஒதுக்கீடு, பெண்களின் பாதுகாப்பு, மக்களவை தேர்தலில் பாஜகவின் கூட்டணி என பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இடஒதுக்கீடு மற்றும் என்ஆர்சி விவகாரம் குறித்தான கேள்விகளுக்கு மோடி பதிலளிக்கையில்,  

இடஒதுக்கீடு : 

"இந்திய அரசமைப்பின் குறிக்கோள் மற்றும் அம்பேத்கரின் கனவுகள் இன்னும் முழுமை பெறாமலே உள்ளது. அம்பேத்கரின் கனவு நனவாவதற்கு இடஒதுக்கீடு தான் முக்கியமான கருவி. அவருடைய கனவை நனவாக்க வேண்டியதற்கான பொறுப்பு அனைவரிடமும் உள்ளது. இடஒதுக்கீடு இங்கே இருக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

அம்பேத்கரின் கனவுகள் தான் இந்த தேசத்தின் பலம். அதை நிறைவேற்ற நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அதை நிறைவேற்றுவதற்கு 'சப்கா சாத், சப்கா விகாஸ்' (ஒன்றிணைவோம், வளர்ச்சி காண்போம்) என்பது தான் எங்களது மந்திரம். ஏழை மக்கள், தலித், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அடித்தட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பது மிகவும் அவசியம். 

ஒரு சில கூட்டங்கள் இருக்கின்றன. அவர்கள் தேர்தலுக்கு முந்தைய நேரத்தில் பாஜக இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் என்பது போன்ற பிரச்னைகளை கிளப்புவார்கள். ஒரு சில ஊடகங்களும் அதனை பெரிதுபடுத்தும். இதுபோன்ற விவகாரங்களில் தொடர்ந்து புரளியை கிளப்பி அரசியலாக்குபவர்கள் தான் அம்பேத்கரின் கனவை சிதைக்கின்றனர். சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட பகுதியினர் மத்தியில் சந்தேகத்தையும், அவநம்பிக்கையையும் அவர்கள் பரப்புகின்றனர். ஆனால், இந்திய மக்கள் விவேகமானவர்கள், இதுபோன்ற பிரச்சாரங்களை அவர்கள் நம்பமாட்டார்கள். 

இந்தியா முழுவதிலும் பார்த்தால் பட்டியலினத்தவர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாஜவை சேர்ந்தவர்கள் தான்.

மண்டல் கமிஷன் குறித்து முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறிய அனைத்தையும் கவனிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் அவர் அதனை எதிர்த்தார். இன்றைக்கும் அவரது கட்சியில் எந்த சூழ்நிலையும் மாறவில்லை" என்றார்.

என்ஆர்சி விவகாரம் : 

"தன் மீது நம்பிக்கை இழந்தவர்கள், பெரும்பான்மையான ஆதரவை இழந்து அச்சப்படுபவர்கள் தான் உள்நாட்டு போர், ரத்த களரி போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவார்கள். அவர்கள், இந்தியாவின் நாடித்துடிப்பில் இருந்து தொடர்பற்று உள்ளனர். 2005-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மம்தா பானர்ஜி என்ன சொன்னார் என்பதை அவர் நினைவகூர வேண்டும். அன்றைக்கு பேசிய மம்தா பானர்ஜி சரியா அல்ல இன்றைக்கு பேசும் மம்தா பானர்ஜி சரியா?

என்ஆர்சி விவகாரத்தை வைத்து காங்கிரஸ் கட்சியினரும் அரசியல் விளையாட்டை விளையாடுகின்றனர். என்ஆர்சி விவகாரத்தின் தொடக்கத்துக்கு 30 ஆண்டுகள் பின்நோக்கி செல்ல வேண்டும். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, பல அழுத்தங்கள் காரணமாக அஸ்ஸாம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். 

அஸ்ஸாம் மக்கள் காங்கிரஸ் கட்சியனருக்கு வாக்களித்ததில் இருந்தே, காங்கிரஸ் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. மக்களை தவறாகவே வழிநடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினருக்கு பிரச்னை எழும் என்று தெரிந்தும் வாக்கு வங்கி அரசியலுக்காக கடந்த 30 ஆண்டுகளாக அதனை அப்படியே விட்டுவிட்டனர். 

இந்திய குடிமக்கள் யாரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டாம் என்பதை நான் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய சூழல்படி, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும். என்ஆர்சி எங்களது வாக்குறுதி. அதனை நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிறைவேற்றி வருகிறோம். இது மக்கள் சம்பந்தப்பட்டது, அரசியல் அல்ல. அரசியல் களத்தில் நமது பணி என்பது மக்கள் எங்களை எதற்கு தேர்ந்தெடுத்தார்களோ அதற்காகவும், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலும் செயல்பட வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com