குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்று ஓராண்டு நிறைவு

குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்று சனிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்று ஓராண்டு நிறைவு

குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவியேற்று சனிக்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
இந்த ஓராண்டு காலத்தில் அவர் மேற்கொண்ட பயணங்கள், பணிகள் உள்ளிட்ட விவரங்களை சுட்டுரையில் குடியரசு துணைத் தலைவரின் செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த ஓராண்டில் நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் 28 மாநிலங்களில் வெங்கய்ய நாயுடு சுற்றுப்பயணம் செய்துள்ளார். சிக்கிம் மாநிலத்துக்கு மட்டுமே இதுவரை அவர் செல்லவில்லை. அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி, மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டதே இதற்கு காரணம் ஆகும்.
வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களிலும் வெங்கய்ய நாயுடு சுற்றுப்பயணம் செய்துள்ளார். தனது சுற்றுப்பயணத்தின்போது 56 பல்கலைக்கழகங்களுக்கு அவர் சென்றுள்ளார். அதில் 29 பட்டமளிப்பு விழாக்களும் அடங்கும். நாட்டில் முன்னணியில் இருக்கும் 15 அறிவியல், ஆராய்ச்சி மையங்களுக்கும் சென்றுள்ளார்.
நாள்தோறும் 450 பேரிடம் வெங்கய்ய நாயுடு உரையாடியுள்ளார். அப்போது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசியுள்ளார்.
தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக கௌதமாலா, பனாமா, பெரு ஆகிய 3 லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார். அந்த சுற்றுப்பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர்கள், மூத்த அமைச்சர்கள் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். கௌதமாலா, பனாமா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்ததன் மூலம், அந்நாட்டுக்கு இந்தியாவில் இருந்து சென்ற முதல் முக்கிய பிரமுகர் எனும் பெருமையை வெங்கய்ய நாயுடு பெற்றார்.
தில்லியில் கடந்த ஓராண்டில் ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, பெல்ஜியம், நேபாளம், கம்போடியா, இத்தாலி உள்ளிட்ட 22 நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில், அந்த அவையை அவர் திறம்பட நடத்தியுள்ளார். அப்போது 3 உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட மனு மீது வெங்கய்ய நாயுடு விரைந்து முடிவெடுத்தார். மாநிலங்களவை விதியை ஆய்வு செய்ய 2 பேர் கொண்ட குழுவை அவர் அமைத்துள்ளார்.
மாநிலங்களவை தலைவராக வெங்கய்ய நாயுடு பதவி வகித்த கடந்த ஓராண்டு காலத்தில், 3 கூட்டத் தொடர்கள் நடந்துள்ளன. அந்த கூட்டத் தொடர்களில், மாநிலங்களவையில் 27 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com