தலித் சமூகத்தினர் நலனுக்காக செய்த சாதனை என்ன?

தலித் சமூக ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் எதிர்க்கட்சிகள், அந்த சமூகத்தினருக்கு செய்த சாதனைகள் என்னென்ன? மத்திய அமைச்சரும், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜன சக்தி
தலித் சமூகத்தினர் நலனுக்காக செய்த சாதனை என்ன?

தலித் சமூக ஆதரவாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் எதிர்க்கட்சிகள், அந்த சமூகத்தினருக்கு செய்த சாதனைகள் என்னென்ன? மத்திய அமைச்சரும், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லியில் கட்சித் தொண்டர்கள் மற்றும் தலித் சமூகத்தினர் மத்தியில் சனிக்கிழமை உரையாற்றியபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது:
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தவுடன், அந்த சட்டத்தை வலுப்படுத்தும் விதமாக, உடனடியாக சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. தலித் மற்றும் பழங்குடியினர் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக அந்தச் சட்ட மசோதா நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை தலித் சமூகத்தினரின் நல விரும்பிபோல் காட்டிக் கொள்கிறார். ஆனால், அவருடைய காங்கிரஸ் கட்சி, சட்ட மேதை அம்பேத்கர் இரண்டு முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டபோது ஆதரிக்கவில்லை.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருக்கும்போது, அம்பேத்கரின் உருவப்படத்தை வைக்காதது ஏன்?
மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, திரைப்பட நடிகர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து கெளரவித்த காங்கிரஸ் கட்சி, அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்காதது ஏன்?
அம்பேத்கர் பிறந்து, வாழ்ந்து, மறைந்த இடங்களில் (தில்லி, மும்பை, நாகபுரி, லண்டன்) அவருக்கு காங்கிரஸ் கட்சி நினைவிடம் கட்டாதது ஏன்? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் சட்ட அந்தஸ்து கொடுக்கப்படாதது ஏன்?
தலித் சமூகத்தினர் மீது கொண்டிருக்கும் அக்கறை காரணமாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விரைவில் வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. ஆனால், எங்களை தலித் சமூகத்தினருக்கு எதிரானவர்கள் என்று அழைப்பது ஏன் என்ற கேள்விகளுக்கு எதிர்க்கட்சிகள் பதிலளிக்க வேண்டும்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, முதல்வராக இருந்தபோது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக சில உத்தரவுகளை பிறப்பித்தார். பதவி உயர்வில் தலித் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், சமாஜவாதி கட்சி எதிர்ப்பு தெரிவித்தது என்று பாஸ்வான் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com