கனமழை காரணமாக நான்கு நாட்களுக்கு மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் 

கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் நான்கு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நான்கு நாட்களுக்கு மூடப்பட்ட கொச்சி விமான நிலையம் 

திருவனந்தபுரம்: கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் நான்கு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் வரலாறு காணாத கன மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்து தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மாநிலம் முழுவதும் உள்ள 30 அணைகளில் அதிகமான தண்ணீர் வரத்தின் காரணமாக மதகுகள் திறக்கப்பட்டு வெள்ளநீர் ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. இடுக்கி, முல்லைப்பெரியாறு உள்பட அனைத்து அணைகளுக்கும் வரும் உபரி நீரானது நேற்று இரவு முதல் திறந்து விடப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது, பெரும்பாலான இடங்களில் 30 கி.மீ. வேகத்திலேயே ரயில்கள் இயக்கப்படுகிறது. கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எப்பொழுதும் சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் மூணாறு கேரளாவின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடரும் நிலையில் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அங்கு ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தேவையான உதவிகளை செய்வோம் என மத்திய அரசும் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கனமழை, வெள்ளம் காரணமாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவையில் ஏற்கனவே பாதிப்பு நிலவி வந்தது. தற்போது கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் மழை நீர் கடல் போல் தேங்கியுள்ள காரணத்தினால் விமான சேவை முடங்கியுள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை விமான சேவைகள் கொச்சி விமான நிலையத்தில் இருக்காது என்றும் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் விமான நிலைய தரப்பில் புதனன்று  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு வரும் விமானங்கள் அனைத்தும் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com