12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்

பிகார் மாநிலம், நாளந்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன் திருட்டுப்போன புத்தர் சிலையை மீட்டு பிரிட்டன் காவல்துறையினர் இந்தியாவுக்கு திருப்பியளித்துள்ளனர்.
பிரிட்டன் அதிகாரிகளால், லண்டனில் உள்ள இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹாவிடம் சுதந்திர தினத்தில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட புத்தர் சிலை.
பிரிட்டன் அதிகாரிகளால், லண்டனில் உள்ள இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹாவிடம் சுதந்திர தினத்தில் திருப்பி ஒப்படைக்கப்பட்ட புத்தர் சிலை.


பிகார் மாநிலம், நாளந்தாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து 60 ஆண்டுகளுக்கு முன் திருட்டுப்போன புத்தர் சிலையை மீட்டு பிரிட்டன் காவல்துறையினர் இந்தியாவுக்கு திருப்பியளித்துள்ளனர். வெண்கலத்தால் ஆன அந்த சிலை 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
இந்திய சுதந்திர தினத்தையொட்டி, இந்த சிறப்புமிக்க நடவடிக்கையை பிரிட்டன் காவல்துறை மேற்கொண்டுள்ளது.
கடந்த 1961-ஆம் ஆண்டில், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நாளந்தா அருங்காட்சியகத்தில் இருந்து 14 சிலைகள் களவாடப்பட்டன. அதில், உள்புறத்தில் வெள்ளியாலும், வெளிப்புறத்தில் வெண்கலத்தாலும் ஆன இந்த புத்தர் சிலையும் ஒன்றாகும்.
பல இடங்களில் கைமாறிய அந்த சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லண்டனில் ஏலத்துக்கு வந்தது. அதை வியாபாரி ஒருவர் விலைக்கு வாங்கினார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து திருடப்பட்ட சிலைதான் ஏலத்தில் விலைக்கு விற்கப்பட்டுள்ளது என்று காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த வியாபாரியிடம் உண்மை நிலவரத்தை காவல்துறையினர் புரிய வைத்தனர். இதனால், அவர் சிலையை திருப்பியளிக்க ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் புதன்கிழமை சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டபோது, இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹாவிடம் புத்தர் சிலையை பிரிட்டன் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையின் துப்பறியும் பிரிவுத் தலைவர் ஷீலா ஸ்டேவார்ட் கூறுகையில், இந்த வரலாற்றுச் சின்னத்தை இந்தியாவிடம் திருப்பியளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சட்ட அமைப்புகள், வர்த்தக அமைப்புகள் மற்றும் அறிவுசார் மக்கள் இணைந்து செயல்படுவதற்கான சிறந்த உதாரணம் இந்த சிலை மீட்பு விஷயம்தான்'' என்றார்.
சிலை எங்கிருந்து எடுக்கப்பட்டதோ, அங்கேயே மீண்டும் கொண்டு செல்லப்படவிருப்பதாக இந்திய தூதர் ஒய்.கே.சின்ஹா தெரிவித்தார். சுதந்திர தினத்தில் சிலை திருப்பளிக்கப்பட்டுள்ளது என்பது, இரு நாடுகளுக்கு இடையிலான பலதரப்பு ஒத்துழைப்புக்கான எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com