ஆம் ஆத்மியிலிருந்து ஆசுதோஷ் திடீர் விலகல்: ராஜிநாமாவை ஏற்க கேஜரிவால் மறுப்பு

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான ஆசுதோஷ் திடீரென புதன்கிழமை அறிவித்துள்ளார்.
ஆம் ஆத்மியிலிருந்து ஆசுதோஷ் திடீர் விலகல்: ராஜிநாமாவை ஏற்க கேஜரிவால் மறுப்பு


ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரான ஆசுதோஷ் திடீரென புதன்கிழமை அறிவித்துள்ளார். ஆனால், அவரது ராஜிநாமாவை இந்த ஜென்மத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது' என கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியது குறித்து ஆசுதோஷ் தனது சுட்டுரையில் இட்டுள்ள பதிவில், ஒவ்வொரு பயணத்துக்கு ஓர் முடிவு உண்டு. அதுபோல அழகான, புரட்சிகரமான ஆம் ஆத்மி கட்சியுடனான சம்பந்தமும் முடிவு அடைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியுள்ளேன். எனது விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழுவைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விலகலுக்கு காரணம் முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்டவிஷயமாகும். எனக்கு இதுநாள் வரை ஆதரவு அளித்த கட்சிக்கும், கட்சியில் உள்ள அனைவருக்கும் நன்றியை உரிதாக்குகிறேன். இந்த விலகல் தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்க நான் விரும்பவில்லை. எனது அந்தரங்கத்தை மதிக்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
ராஜிநாமாவை ஏற்க கேஜரிவால் மறுப்பு: இதனிடையே, ஆசுதோஷின் ராஜிநாமாவை ஏற்றுக் கொள்ள முடியாது என கேஜரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சுட்டுரையில், உங்களது (ஆசுதோஷின்) விலகலை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இல்லை...இந்த ஜென்மத்தில் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அண்மையில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் தொடர்பாக ஆசுதோஷுக்கு அதிருப்தி இருந்ததாக கட்சியில் உள்ள சிலரால் கூறப்பட்டது. இது குறித்து கட்சியின் தில்லி பிரதேச அமைப்பாளரும், அமைச்சருமான கோபால் ராய் கூறுகையில், ஆசுதோஷுக்கு அதுபோன்ற அதிருப்தியோ, கோபமோ இல்லை. தனிப்பட்ட முடிவுகளை எடுக்க ஒவ்வொருக்கும் உரிமை உள்ளது' என்றார்.
கட்சியின் செய்தித் தொடர்பாளர் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ஆசுதோஷின் விலகல் கடிதத்தை கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com