கேரளத்தில் கனமழை எச்சரிக்கை: 12 மாவட்டங்களில் உஷார்நிலை: கொச்சி விமான நிலையம் மூடல்

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஒரு பெண்ணையும், இரு குழந்தைகளையும் பெரிய பாத்திரத்தை பயன்படுத்தி மீட்டு கொண்டு வரும் மீட்புக் குழுவினர்.
திருவனந்தபுரத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஒரு பெண்ணையும், இரு குழந்தைகளையும் பெரிய பாத்திரத்தை பயன்படுத்தி மீட்டு கொண்டு வரும் மீட்புக் குழுவினர்.


கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 25 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளம் உள்புகுந்ததன் காரணமாக மாநிலத்தின் முக்கிய விமான நிலையமான, கொச்சி சர்வதேச விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கிய மழையானது, தொடர்ந்து தீவிரம் குறையாமல் பெய்து வருகிறது.
திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திரிச்சூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும், அங்கு மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ஓடுபாதையில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளதால், வரும் சனிக்கிழமை வரை விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ஓடுபாதையில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளதால், வரும் சனிக்கிழமை வரை விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து பாதிப்பு: கொச்சி விமான நிலையத்தில் தண்ணீர் புகுந்துள்ளதால், வரும் சனிக்கிழமை வரை விமான நிலையம் மூடப்படுவதாகவும், விமானங்கள் அனைத்தும் மும்பை உள்ளிட்ட மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில், சிறிய விமானங்களைக் கடற்படை விமானதளத்தில் தரையிறக்கவும், விமானங்களை மற்ற நகரங்களுக்குத் திருப்பி விடாமல், மாநிலத்தின் மற்ற விமான நிலையங்களான திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகியவற்றுக்குத் திருப்பிவிட வேண்டுமெனவும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அங்கு தரையிறங்கும் பயணிகள் அனைவரையும் அவரவர்களின் ஊருக்குக் கொண்டு சென்று சேர்ப்பதற்கு, அரசுப் பேருந்துகளைத் தயார் நிலையில் வைக்கும்படியும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக கொல்லம்-புனலூர்-செங்கோட்டை வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம்-திரிச்சூர் வழியாகச் செல்லும் ரயில்கள், வழக்கத்தை விட மெதுவான வேகத்தில் இயக்கப்படும் என்றும், மழையினால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க, பொறியாளர்களைக் கொண்டு ரயில் பாலங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அத்திரப்பள்ளி, பொன்முடி, மூணார் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
முல்லைப் பெரியாறு அணை திறப்பு: முல்லைப் பெரியாறு அணை தனது முழுக் கொள்ளளவான 142 அடியில், 140 அடியை எட்டியதால், அணையிலிருந்து புதன்கிழமை அதிகாலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், பெரியாற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தமிழர் பலி
மூணாரில் ஏற்பட்ட நிலச்சரிவில், உணவகத்தில் பணிபுரிந்து வந்த தமிழர் ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அங்கு பணிபுரிந்த மற்ற 6 பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.
மலப்புரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இடுக்கியில் நிலச்சரிவு காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். திரிச்சூரில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
மழையின் காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com