கேரளா, கர்நாடகாவை அச்சுறுத்தும் மேகக் கூட்டங்கள்: இன்றும் கன மழை நீடிக்கும் என எச்சரிக்கை

கேரளா, கர்நாடக மாநிலங்களை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் இன்றும் கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரளா, கர்நாடகாவை அச்சுறுத்தும் மேகக் கூட்டங்கள்: இன்றும் கன மழை நீடிக்கும் என எச்சரிக்கை


கொச்சி: கேரளா, கர்நாடக மாநிலங்களை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் இன்றும் கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக கேரள, கர்நாடக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து, கேரள மாநிலத்தில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வரலாறு காணாத பேரழிவை மாநிலம் சந்தித்துள்ளது.

கேரளாவில் உள்ள 39 அணைகளில் 33  அணைகளின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை அடைந்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இடுக்கி - சேறுதோணி அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 15 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெரியாறு ஆற்றங்கரையோரம் இருந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், ஆகஸ்ட் 16ம் தேதியான இன்று கேரள, கர்நாடக மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதே நிலை அடுத்த 48 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சட்டீஸ்கர்  மற்றும் ஒடிசா அருகே நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு - வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்வதால், கேரள, கர்நாடக மாநிலங்களில் படிப்படியாக மழையின் அளவுக் குறையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், வெள்ளத்தில் சிக்கியிருப்போரை மீட்கும்  பணிக்கு ஹெலிகாப்டர், மத்தியப் படையின் சிறிய ரக விமானத்தை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். கேரள மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று பிரதமர் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 31 செ.மீ. மழையும், தேவாலாவில் 17 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் இருந்து காவிரியில் நீர் திறப்பு 1.90 லட்சம் கன அடியாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com