நாட்டின் வளர்ச்சியை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: அரவிந்த் கேஜரிவால்

நாட்டின் வளர்ச்சியை மறுமதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
நாட்டின் வளர்ச்சியை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்: அரவிந்த் கேஜரிவால்


நாட்டின் வளர்ச்சியை மறுமதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
தில்லி சத்தர்சால் விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு முதல்வர் கேஜரிவால் பேசியதாவது: 
நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட, இன்னுயிரை நீத்த தியாகிகளை இந்த நன்னாளில் நினைவுகூர்வது அவசியமாகும். நாட்டுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என எண்ணியும், நாடு அடைய வேண்டிய வளர்ச்சியை எண்ணியும் விடுதலைக்குப் பாடுபட்டவர்களின் கனவு 71 ஆண்டுகள் ஆகியும் நனவாகவில்லை. விடுதலை அடைந்து 71 ஆண்டுகள் ஆகியிருப்பது ஒரு நாட்டுக்கு மிக நீண்ட காலமாகும்.
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் நாகசாகி, ஹிரோஷிமா நகரங்கள் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. ஜப்பான் முழுவதுமாக அழிக்கப்பட்டது. இருப்பினும் 20 அல்லது 25 ஆண்டுகளில் ஜப்பான் மீண்டெழுந்தது. 
நமது நாட்டைவிட பல்வேறு துறைகளில் ஜப்பான் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. நமது நாடு விடுதலை பெற்ற பிறகு விடுதலை பெற்ற பல நாடுகள் முன்னேற்றப் பாதையில் நம்மைக் காட்டிலும் வீறு நடை போடுகின்றன. 
அதேசமயம், நமது நாடு வளர்ச்சியில் ஏன் பின்தங்கியது? நாட்டு மக்கள் எழுத்தறிவு இல்லாமல் இருப்பது ஏன்? ஏழ்மையில் உழல்வது ஏன்? விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?ஆகியன குறித்து தொடர்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. நாட்டின் வளர்ச்சியை மறுமதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்த 3 ஆண்டுகளில் வளர்ச்சி ஏற்படுத்திக் காட்டியுள்ளோம். தில்லியின் வளர்ச்சியின் கதையில் இடம்பெற்றுள்ள மொஹல்லா கிளினிக்குகளும், ஹேப்பினஸ் பாடத் திட்டமும் சர்வதேச அளவில் உலக நாடுகளில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் தில்லியில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கல்வித் துறையில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. 
தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. தனியார் பள்ளிகளில் பயின்ற பல மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேரத் தொடங்கிருப்பது மிகப் பெரிய சாதனையாகும் என்றார் கேஜரிவால்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com