நீதித் துறையை பலவீனப்படுத்த முயற்சிக்க வேண்டாம்: நீதிபதிகளுக்கு தீபக் மிஸ்ரா வலியுறுத்தல்

நீதித் துறையை விமர்சனம் செய்வது, பலவீனப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்' என்று மூத்த நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார்.
நீதித் துறையை பலவீனப்படுத்த முயற்சிக்க வேண்டாம்: நீதிபதிகளுக்கு தீபக் மிஸ்ரா வலியுறுத்தல்


நீதித் துறையை விமர்சனம் செய்வது, பலவீனப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்' என்று மூத்த நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறைமுகமாக அறிவுறுத்தியுள்ளார்.
நீதித் துறையை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, அதில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்ட இந்த விழாவில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பேசியதாவது:
ஒரு அமைப்பை விமர்சிப்பதும், அதன் மீது தாக்குதல் நடத்துவதும், அழிப்பதும் எளிமையானதுதான். ஆனால், அதை சிறந்த அமைப்பாக வளர்த்தெடுப்பதும், அதில் சீர்திருத்தம் கொண்டுவருவதும் சவாலான, சிரமமான விஷயமாகும்.
நீதித் துறையை வலுப்படுத்துவதற்கு ஒருவர் தனது சொந்த லட்சியத்துடன், பக்குவமான, பொறுப்பான, சுய கட்டுப்பாடு கொண்ட ஆக்கப்பூர்வமான எண்ணத்தோடு உறுதியான நடவடிக்களில் ஈடுபட வேண்டும். நீதித் துறையை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் சில சக்திகள் இருக்கலாம்.
(நீதித் துறைக்கு உள்ளே இருந்தும், நீதித் துறைக்கு வெளியே இருந்தும் வரும் அதிருப்தி குரல்களை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறார்). ஆனால், அந்த முயற்சிகளுக்கு நீதித் துறை இடம் கொடுக்காது.
மக்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்பதன் அடையாளமாகவே, நீதி தேவதையின் கைகளில் தராசு உள்ளது. எனவே, நீதி தேவதைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்படக் கூடாது. எவர் ஒருவர் சமநிலையைத் தவறினாலும், அது நீதி தேவதையைக் காயப்படுத்தும். நீதி தேவதை கண்ணீர் சிந்தினால், நாமும் கண்ணீர் சிந்த வேண்டி வரும். எனவே, நாம் ஒருபோதும் நீதி தேவதை கண்ணீர் சிந்துவதை அனுமதிக்கக் கூடாது. ஆக்கப்பூர்வமான முறையில் பங்காற்றினால் மட்டுமே நீதித் துறையை புதிய உச்சத்துக்கு வளர்த்தெடுக்க முடியும் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார். 
மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பொதுநல மனுக்களை விசாரிப்பதற்கு அதிக கால விரயமும், கூடுதல் பண விரயமும் ஆகிறது. எனவே, அந்த மனுக்கள் பரந்த அளவிலான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளனவா? என்பது குறித்து நீதிமன்றம் தணிக்கை செய்ய வேண்டியது அவசியம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com