21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம்

வேத மந்திரங்கள் முழங்க வாஜ்பாயின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் தகனம்


புது தில்லி: வேத மந்திரங்கள் முழங்க வாஜ்பாயின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதி  அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உடல், வேத மந்திரங்கள் முழங்க தகனம் செய்யப்படும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டு குடும்ப உறுப்பினர்கள் இறுதிச் சடங்குகளை செய்தனர். வாஜ்பாயின் உடல் மீது சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டன. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்குகள் நடந்த போது அவ்விடம் வாஜ்பாயின் தோற்றம் போலவே அமைதியாகக் காணப்பட்டது. அங்கு ஒரு ஆழ்ந்த சோகம் அப்பிக் கொண்டிருப்பதை பார்ப்பவர்களாலும் உணர முடிந்தது.

முன்னதாக இறுதிச் சடங்குகள் தொடங்குவதற்கு முன்பு, வாஜ்பாய் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை எடுத்த முப்படை வீரர்கள், அதனை அவரது பேத்தியிடம் ஒப்படைத்தனர்.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த வாஜ்பாயின் வளர்ப்பு மகளான நமிதா கௌல் பட்டாச்சாரியாவின் மகள் நிஹாரிகாவிடம் தேசியக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக புது தில்லியில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு புறப்பட்ட வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் ஸ்மிருதி ஸ்தல் வந்தடைந்தது.

அங்கு அவருக்கு முப்படை வீரர்களின் தளபதிகள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வாஜ்பாயின் நெருங்கிய நண்பர் அத்வானி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் இறுதி  அஞ்சலி செலுத்தினர்.

பூடான் மன்னர், நேபாள, வங்கதேச, இலங்கை அமைச்சர்கள், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அமித் கர்சாய்  ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை முற்பகல் 2 மணியளவில் புறப்பட்டது. பாஜக கட்சி அலுவலகத்தில் தொடங்கிய அவரது இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தது.

ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்ட வாஜ்பாயின் உடலுக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலை முழுவதும் மக்கள் வெள்ளம் போல காட்சியளித்தது.

இறுதி ஊர்வலத்தின் போது வாஜ்பாயின் உடலுடன் நடந்தே வந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வாகனத்தில் இருந்து வாஜ்பாயின் உடல் இறக்கப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுதார்.

10 முறை மக்களவைக்குத் தேர்வான மக்களின் தலைவராக விளங்கிய வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும்  மேலாக சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய், சிகிச்சை பலனின்றி காலமானதாக மருத்துவமனை அறிவித்தது.

வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகளும் இன்று பொது விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் உதவி - ஏஎன்ஐ
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com