அணையா பெரு நெருப்பு அடல்ஜி!

இந்திய அரசியல் வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்; இயற்கையின் அழைப்புக்கு அடிபணிந்து மறைந்தும் இருக்கிறார்கள்.
அணையா பெரு நெருப்பு அடல்ஜி!

இந்திய அரசியல் வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்; இயற்கையின் அழைப்புக்கு அடிபணிந்து மறைந்தும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் மக்கள் மனதில் அழியாத் தடம் பதித்துச் சென்றவர்கள் மிகச் சொற்பம்.
அந்த வரிசையில் தற்போது வாஜ்பாயின் பெயரும் இணைந்திருக்கிறது. அவரது அரசியல் பயணமும், ஆட்சித் திறனும் தேசத்தின் நினைவில் இருந்து நீக்க முடியாத அளவுக்கு இரண்டறக் கலந்திருக்கிறது என்பது நிதர்சனம்.
வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றபோது அவரது நாற்காலி பரமபத விளையாட்டில் பாம்புகளால் சூழப்பட்டதைப் போலத்தான் இருந்தது. ஆனால், அத்தகைய நெருக்கடி நிலையிலும், கூட்டணிக் கட்சிகளின் பகடையாட்டத்துக்கு பலியாகாமல் பல சாதனகளை செய்த பெருமை அவருக்கு உண்டு.
தங்க நாற்கரத் திட்டமாகட்டும்; அணு ஆயுத சோதனையாகட்டும்; கார்கில் வெற்றியாகட்டும்; இந்தியா - பாகிஸ்தான் உறவில் புதிய மைல்கல்லை தொட்டதாகட்டும், முன்னெடுத்த காரியங்கள் அனைத்தையும் வென்றெடுத்தவர் வாஜ்பாய்.
அதுமட்டுமன்றி, முந்தைய ஆட்சியாளர்கள் தவறவிட்ட நலத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி தனி முத்திரை பதித்தார். அதன் விளைவாகவே, அரசியலில் இருந்து விலகி பல ஆண்டுகளானபோதும் பாஜகவின் அடையாளமாக வாஜ்பாய் இருந்து வந்தார்.
பொதுவாழ்வில் சாதனைகள் ஒரு புறம் இருந்தாலும், அவரது புகழுக்கு மேலும் அணி சேர்த்தது வாஜ்பாயின் நேர்மையும், பண்பும். அதனால்தான் அவரது வாழ்க்கை ஆர்எஸ்எஸ், பாஜகவினரைத் தாண்டி பல்வேறு தரப்பினருக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.
அரசியலில் மாற்றுக் கட்சித் தலைவர்கள் பரஸ்பரம் தூற்றிக் கொள்வதை மட்டுமே பார்த்து வந்த மக்களுக்கு வாஜ்பாயின் செயல்பாடுகள் விநோதமாக இருந்திருக்கக் கூடும். எதிரிகளைக் கூட அவர் ஒருபோதும் கடுமையான வார்த்தைகளையோ, சொல்லாடல்களையோ பயன்படுத்தி காயப்படுத்தியதில்லை.
மக்களுக்கானவர் அல்ல வாஜ்பாய்; அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முகமூடி என்று மாற்றுக் கட்சித் தலைவர்கள் ஒரு காலத்தில் வசைபாடினர். அதற்கு அவர் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் 
என்பதை அறிய நாடே ஆவலாய் இருந்தது. ஆனால், எந்த வார்த்தையையும் வீணாக்காமல் ஒற்றை புன்முறுவலை மட்டுமே பதிலாக அளித்தார் வாஜ்பாய். அவரது அரசியல் முதிர்ச்சியைக் கண்டு அசந்துபோனது அன்றைய அரசியல் அரங்கம்.
வெறும் வார்த்தைக்காகக் கூட எவரையும் காயப்படுத்த விரும்பாத அவரது பண்பு அனைவரையும் ஆட்கொண்டது. அதன் காரணமாகவே கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் வாஜ்பாயின் மீது மாசற்ற மரியாதை கொண்டுள்ளனர்.
ஒரு கவிஞன் நாடாளுவது என்பது வாஜ்பாய் காலத்துக்கு முன்பும் நடக்கவில்லை. பின்பும் நடக்கவில்லை. தேர்ந்த கவிஞரான அவர், கற்பனைகளால் நிரப்பப்பட்ட தனது கனவு தேசத்தை நிஜத்தில் கொண்டுவர முற்பட்டவர். 
எதிர்காலம் பற்றிய புரிதல் அவருக்கு நிறையவே இருந்தது. அதனால்தான் தனது மரணத்தைக்கூட முன்கூட்டியே தீர்மானித்து இவ்வாறு கவிதை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்.
வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு
மீண்டும் நான் வருவேன்.
கேவலம் மரணத்திடம் 
ஏன் பயம் கொள்ள வேண்டும்?

மரணமே!
திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே.
என்னை எதிர்கொண்டு நேரடியாக பரீட்சித்துப் பார்.
கொண்ட கொள்கைக்காக எத்தனையோ தலைவர்களையும், கட்சிகளையும் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த வாஜ்பாய், இந்தக் கவிதை மூலம் மரணத்தையும் எதிர்க்க தயங்கவில்லை. எளிய மனிதன் எந்த உயரத்தையும் எட்டிப் பிடிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு அவர். தேசம் இன்றைக்கு வாஜ்பாயை இழந்திருக்கலாம். ஆனால், அவர் விட்டுச் சென்ற நினைவுகளுக்கும், புகழுக்கும் என்றென்றும் 
இறப்பில்லை.

இந்திராவின் கண்ணீருக்கு மதிப்பளித்தவர்!


இந்திரா காந்தியும், வாஜ்பாயும் அரசியலில் நேர் எதிர் துருவங்களாக விளங்கியவர்கள். 1980-களில் காங்கிரஸ் ஆட்சியில் அரங்கேறிய அனைத்து தவறுகளையும் நாடாளுமன்றத்தில் உரக்கக் கூறியவர் வாஜ்பாய். இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே வெளிப்படையான மோதல் இருந்து வந்தது.
அந்தத் தருணத்தில், இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி விமான விபத்தில் சிக்கி காலமானார். அந்தச் செய்தி அறிந்ததும் கட்சி பேதங்களைக் கடந்து தனிப்பட்ட முறையில் மிகுந்த வேதனைக்குள்ளானார் வாஜ்பாய்.
உடனடியாக இந்திராவுக்கு அவர் ஆறுதல் கூறினார். அதுமட்டுமன்றி, அதற்கு அடுத்த சில மாதங்களுக்கு இந்திராவையும், அவரது ஆட்சி நிர்வாகத்தையும் எவரும் விமர்சிக்கக் கூடாது என்று கட்சியினருக்கு கட்டளையிட்டார். 
இந்திரா காந்தி அந்த சோகத்தில் இருந்து விடுபட்ட பிறகுதான் மீண்டும் தனது அரசியல் அஸ்திரத்தை கைகளில் எடுத்தார் வாஜ்பாய். தனயனை இழந்த தாயின் வலியை சொந்த உற்றார் உறவினரே உணர்ந்து கொள்ளாத காலத்தில், இந்திரா மீது வாஜ்பாய் காட்டிய கனிவும், மாண்பும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கவிஞன் என்றொரு முகம் உண்டு!


வாஜ்பாய்க்கு அரசியல்வாதி, சிந்தனாவாதி, சிறந்த பேச்சாளர் என எத்தனையோ முகங்கள் இருந்தாலும், கவிஞன் என்ற அடையாளம் அவரை முழுமைப்படுத்தியது என்றே கூறலாம். அவரது எழுத்தாற்றல் மாற்றுக் கொள்கை கொண்டவர்களையும் மலைக்கச் செய்தது. சிந்தை முழுக்க வியாபித்திருக்கும் கற்பனைக் கருவை பேனாவின் வழியே பிரசவிக்கும் கலை அவருக்கு வாய்த்திருந்தது.
வித்தியாசமான கோணத்தில் எத்தனையோ சிறந்த கவிதைகளை அவர் இயற்றியுள்ளார். அதற்கு ஓர் உதாரணம்தான் இது... அனைத்து கவிஞர்களும் கதிரவனைத் தொழுதால், வாஜ்பாயோ ஆதவனின் பார்வையால் அஸ்தமனமான பனித் துளியை நினைத்து உருகிறார்.
சூரியன் மீண்டும் உதிக்கும்
வெய்யிலும் மீண்டும் தோன்றும்
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில்
துளிர்த்திருக்கும் பனித்துளிகளை
எல்லாப் பருவங்களிலும் காண இயலாது
இந்தக் கவிதையின் மூலம் முற்றத்து புல்வெளியின் மேல் படர்ந்திருக்கும் பனித் துளிக்கு மானசீக காதலனாகிறார் வாஜ்பாய்.


லாகூருக்கு வரலாற்று பயணம்


பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியாக, இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு நேரடி பேருந்து சேவையை தொடங்கி வைத்து, முதல் பேருந்தில் லாகூருக்கு வாஜ்பாய் மேற்கொண்ட பயணம், இந்திய வரலாற்றில் வேறு எந்த தலைவர்களும் முன்னெடுக்காத முயற்சியாகும்.
பஞ்சாபின் அமிருதசரஸ் நகரில் இருந்து லாகூருக்கு வாஜ்பாய் பேருந்தில் சென்றபோது, அவருடன் ஹிந்தி நடிகர் தேவ் ஆனந்த், எழுத்தாளர் ஜாவீத் அக்தர், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். இந்த காட்சியை இந்திய தொலைக்காட்சிகள் மட்டுமன்றி, உலக தொலைக்காட்சிகள் அனைத்தும் நேரலை செய்ததோடு மட்டுமல்லாமல், வாஜ்பாய் முயற்சியால் தெற்காசியாவில் அமைதியும், வளர்ச்சியும் ஏற்படும் என்று புகழ்ந்தன.
இந்த பயணத்தின்போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை வாஜ்பாய் சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, புகழ்பெற்ற லாகூர் பிரகடனம் வெளியிடப்பட்டது.
வாஜ்பாயின் இந்த பயணம், இந்தியா-பாகிஸ்தான் உறவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று அனைவராலும் வரவேற்கப்பட்டது. ஆனால், கார்கிலுக்குள் பாகிஸ்தான் ராணுவம் ரகசியமாக ஊடுருவியது, வாஜ்பாயின் அனைத்து முயற்சியையும் வீணாக்கி விட்டது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது முழு அளவில் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்தின் முப்படைகளும் தயாராகின. எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டது. அப்போது வாஜ்பாய் எடுக்கப் போகும் முடிவை உலக நாடுகளே எதிர்பார்த்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுப்பது தொடர்பான முடிவை அவர் எடுத்திருந்தால், அந்நாட்டுடன் இந்தியாவுக்கு முழு அளவில் போர் மூண்டிருக்கும். இந்த போரில் இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பர். இதை கவனத்தில் கொண்ட வாஜ்பாய், கார்கிலுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினர், பயங்கரவாதிகளை மட்டும் விரட்டியடிப்பது என்ற கொள்கையை கடைப்பிடித்தார். இதனால் இந்தியா, பாகிஸ்தானில் பேரழிவு ஏற்படுவதை தவிர்த்தார் வாஜ்பாய்.

மதங்களைக் கடந்த மனிதநேயர்


பாபர் மசூதி இடிப்பின்போது அரசியல் ரீதியாக நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகினர்.
விமர்சனங்களைத் தவிர்க்க பாஜகவைச் சேர்ந்த பல தலைவர்கள் பாபர் மசூதி இடிப்பு குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர். சிலரோ அந்தச் சம்பவத்தை நியாயப்படுத்தினர். இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வாஜ்பாய் பேட்டியளித்தார். அப்போது பாபர் மசூதி இடிப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு எந்தவிதமான தயக்கமும் இன்றி வாஜ்பாய் பதிலளித்தார், பாபர் மசூதி இடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது; இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கக் கூடாது; அச்சம்பவத்தைத் தடுக்க எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டோம்; ஆனால், அவை பலனளிக்கவில்லை; அதற்காக வருந்துகிறோம்' என்றார் வாஜ்பாய்.
மதங்களைக் கடந்து மனிதத்தன்மையுடனும், நடுநிலையுடனும் அவர் அளித்த பதில் வாஜ்பாயின் மாண்பை பறைசாற்றும் மற்றுமோர் உதாரணமாக விளங்கியது.


சொலல்வல்லன்!


நான்கு தசாப்தங்களுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பெருமைக்குச் சொந்தக்காரர் வாஜ்பாய். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அவர் ஆற்றிய பல உரைகள் பாராட்டுகளைக் குவித்திருக்கின்றன.
அதேபோன்று அவரது சொல்வன்மை அனைவராலும் ரசிக்கக்கூடிய வகையில் இருந்தது. எவரையும் புண்படுத்தாமல், அதேநேரத்தில் நயம்படப் பேசுவதில் வல்லவர் வாஜ்பாய்
ஒருமுறை இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அணு ஆயுதங்கள் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் பேசிய இந்திரா, அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது' என்றார். அப்போது குறுக்கிட்ட வாஜ்பாய், வெறும் தொழில்நுட்பம் இருந்தால் போதுமா? எப்போது உற்பத்தி செய்யப் போகிறீர்கள்? எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த இந்திரா, தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தாலே போதுமானது; ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார். அதற்கு வாஜ்பாய் ஒரு கதையைக் கூறினார்.
ஒரு ஊரில் வேடன் ஒருவன் துப்பாக்கியைப் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்றிருந்தான். துரதிருஷ்டவசமாக அவனிடம் துப்பாக்கி இல்லை. வெறும் உரிமம் மட்டுமே இருந்தது. இந்தச் சூழலில், ஊருக்குள் ஒரு நாள் புலி ஒன்று நுழைந்துவிட்டது. உடனடியாக இந்தத் தகவல் வேடனுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புலியைப் பிடிக்கச் சென்ற வேடன், அதற்கு முன்னால் சென்று தனது துப்பாக்கி உரிமத்தை காண்பித்தான். அப்போது மற்ற அனைவரையும் விட்டுவிட்டு முதல் ஆளாக வேடனைக் கொன்று தின்றது அந்த புலி.
இதுபோலத்தான் இருக்கிறது தற்போது இந்திராவின் கூற்றும் என்றார் வாஜ்பாய். இதைக் கேட்டு இந்திரா உள்பட அவை உறுப்பினர்கள் அனைவரும் பலமாக சிரித்தனர். இவ்வாறு எதிர்க்கருத்தைக் கூட நகைச்சுவையாகத் தெரிவிப்பதில் தேர்ந்தவராக இருந்தார் வாஜ்பாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com