கேரளம்: மழைக்கு 324 பேர் பலி; 2.23 லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சம்: மருந்து, உணவுக்கு பற்றாக்குறை

கேரளத்தில் கனமழை காரணமாக தொடர்ந்து இக்கட்டான சூழல் நிலவுவதாகவும், 50,000 குடும்பங்களைச் சேர்ந்த 2.23 லட்சம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கொச்சியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட பின், நிவாரண முகாமுக்கு அழைத்து செல்லப்படும் மக்கள்.
கொச்சியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட பின், நிவாரண முகாமுக்கு அழைத்து செல்லப்படும் மக்கள்.


கேரளத்தில் கனமழை காரணமாக தொடர்ந்து இக்கட்டான சூழல் நிலவுவதாகவும், 50,000 குடும்பங்களைச் சேர்ந்த 2.23 லட்சம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 324-ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில் மேற்கண்ட தகவலை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, முகாம்களில் தங்கியுள்ள மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை நிலவுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் மழை சார்ந்த இடர்களால் 106 பேர் பலியானதாக பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனுடன் சேர்த்து, கடந்த 8-ஆம் தேதியில் இருந்து மழை மற்றும் நிலச்சரிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 173-ஆக உயர்ந்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மருந்துகளுக்கும், ஆக்ஸிஜனுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்குள்ள நோயாளிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதே சமயம், சில மருத்துவமனைகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாலும் மக்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் மழை தீவிரமானது முதல் ஒரு சில பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே இயங்கி வந்தன. இந்நிலையில், அங்கும் தற்போது எரிபொருள் தீர்ந்து வருகிறது. இதனால், திறந்திருக்கும் ஒரு சில பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இருப்பினும், மீட்பு பணிகளுக்காக 3,000 லிட்டர் டீசலும், 1000 லிட்டர் பெட்ரோலும் இருப்பு வைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதனிடையே, எர்ணாகுளம், பத்தனம்திட்டா, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணியில் வெள்ளிக்கிழமை முதல் 23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. 
பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், குழந்தைகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கட்டடங்களின் மேற்கூரைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதே சமயம், பல பகுதிகளில் முதியோர், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனர்.
ஆலுவா, கள்ளடி, பெரும்பாவூர், முவட்டுபுழா உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் தங்களது படகுகளை கொண்டு வந்து மீட்பு பணிகளில் பங்கெடுத்து வருகின்றனர்.
பல மாவட்டங்களில் வானம் சற்று தெளிவாகியிருந்தாலும், பத்தனம்திட்டா, ஆலப்புழை, எர்ணாகுளம் மற்றும் திரிச்சூர் ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், இந்த 4 மாவட்டங்கள் மற்றும் கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதற்கிடையே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் கேரள மக்கள், இங்குள்ள சிக்கியுள்ள தங்களது குடும்ப உறவுகளை காப்பாற்றக் கோரி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ந்து வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் 26-ஆம் தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், கொச்சி மெட்ரோ ரயில் சேவைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கேரளத்தில் மொத்தமாக 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com