திருவனந்தபுரம், கோழிக்கோட்டிலிருந்து விமானங்கள் இயக்கப்படும்: ஏர் இந்தியா தகவல்

கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் மூடப்பட்டுள்ள கொச்சி விமான நிலையத்துக்குப் பதிலாக திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய விமான நிலையங்களிலிருந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள்


கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் மூடப்பட்டுள்ள கொச்சி விமான நிலையத்துக்குப் பதிலாக திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய விமான நிலையங்களிலிருந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கொச்சியிலிருந்து துபை, புது தில்லி, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா விமானங்கள், வரும் 20-ஆம் தேதி வரை திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்களிலிருந்து இயக்கப்படும். 
மஸ்கட், சலாலா, அபுதாபி, துபை, தோஹா ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திருவனந்தபுரத்திலிருந்தும், ஷார்ஜா, பஹ்ரெய்ன் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்கள் கோழிக்கோடிலிருந்தும், வரும் 26-ஆம் தேதி வரை இயக்கப்படும். 
இந்தப் பயணங்களுக்காக பயணச்சீட்டுப் பதிவில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், மாறுதல்கள் போன்றவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது. மேலும், பயணத்தை ரத்து செய்பவர்களுக்கு பயணச்சீட்டுக்கான முழுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். இந்தச் சலுகைகள் அனைத்தும், கேரளத்திலிருந்து கிளம்பும் விமானச் சேவைகளுக்கு மட்டுமல்லாமல், கேரளத்துக்கு வந்து சேரும் விமானச் சேவைகளுக்கும் பொருந்தும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளத்தில் பெய்து வரும் கனமழையால், கொச்சி விமான நிலையத்தில் நீர் புகுந்தது. இதன் காரணமாக, அந்த விமான நிலையம் வரும் 26-ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொச்சிக்குப் பதிலாக திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய விமான நிலையங்களிலிருந்து விமானங்களை இயக்க, கேரள அரசு விமான நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டது. 
ஆனால், ஏர் இந்தியா தவிர பெரும்பாலான மற்ற விமான நிறுவனங்கள், கேரளத்துக்கான விமானச் சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com