முழு ராணுவ மரியாதையுடன் வாஜ்பாய் உடல் தகனம்: லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி

பாஜகவின் மூத்த தலைவரும், மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தவருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல் தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் வெள்ளிக்கிழமை மாலை 21 குண்டுகள் முழங்க 
ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் வாஜ்பாயின் சிதைக்கு தீ மூட்டிய வளர்ப்பு மகள் நமீதா கௌல் பட்டாச்சார்யா.
ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் வாஜ்பாயின் சிதைக்கு தீ மூட்டிய வளர்ப்பு மகள் நமீதா கௌல் பட்டாச்சார்யா.

பாஜகவின் மூத்த தலைவரும், மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தவருமான மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல் தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் வெள்ளிக்கிழமை மாலை 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் எரியூட்டி தகனம் செய்யப்பட்டது. 
அவரது சிதைக்கு வளர்ப்பு மகள் நமீதா கௌல் பட்டாச்சார்யா தீ மூட்டினார். 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பூடான் அரசர் ஜிக்மி கேசர் நாம்க்யெல் வாங்சுக், வங்கதேசம் வெளியுறவுத் துறை அமைச்சர் அபுல் ஹசன் மெஹமூத் அலி, பாகிஸ்தான் சார்பாக சட்ட அமைச்சர் அலி ஜபார் உள்பட சார்க் நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாய் இல்லத்தில் இருந்து பாஜக தலைமையகத்துக்கும் பின்னர் அங்கிருந்து ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்துக்கு சென்ற அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமான வாஜ்பாயின் (93) உடல் வியாழக்கிழமை இரவு, கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர், காலை 10 மணிக்கு வாஜ்பாயின் இல்லத்தில் இருந்து அவரது பூத உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முப்படை ராணுவ வீரர்கள் சூழ்ந்த வாகனங்களில் தீன தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு புறப்பட்டது. அக்பர் ரோடு, இந்தியா கேட், திலக் மார்க் வழியாக காலை 11 மணிக்கு பாஜக தலைமையகம் வந்து சேர்ந்தது. 5 கிலோ மீட்டர் வந்த இந்த ஊர்வலத்தின் போது பொதுமக்கள் சாலையின் இரு மருங்கிலும் நின்றவாறு அஞ்சலி செலுத்தினர். 
பிரதமர், தலைவர்கள் அஞ்சலி: கட்சித் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதேபோன்று, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிவ சேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். 

மக்கள் வெள்ளத்தின் நடுவே வாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர்.
மக்கள் வெள்ளத்தின் நடுவே வாஜ்பாயின் இறுதி ஊர்வலத்தில் நடந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர்.


இறுதி ஊர்வலம்: அதைத் தொடர்ந்து, பிற்பகல் சுமார் 2 மணியளவில் தலைமையகத்தில் இருந்து வாஜ்பாயின் பூத உடல் இறுதி ஊர்வலமாக விஜய் காட் பகுதி அருகே உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்துக்கு ராணுவ மரியாûயுடன் கொண்டு செல்லப்பட்டது.
நடந்து சென்ற பிரதமர்: வாஜ்பாயைத் தனது தந்தை ஸ்தானத்தில் நினைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில், இறுதி ஊர்வலத்தில் அவர் நடந்து சென்றார். அவருடன் பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் விஜய் ருபானி, சிவராஜ் சிங் சௌகான், யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னவீஸ் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் உடன் சென்றனர். 
வழிநெடுக மலர்தூவி மரியாதை: இறுதி ஊர்வலம் சென்ற சாலைகளின் இருபுறமும் பொதுமக்கள் ஏராளமானோர் கூடி நின்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். சூரியன் மறையும் வரை அடலின் பெயர் இருக்கும்' என்று ஊர்வலத்தில் சென்றவர்கள் கோஷம் எழுப்பினர்.
இறுதி ஊர்வலம் 7 கிலோ மீட்டர் தூரம் கடந்து ஸ்மிருதி ஸ்தலத்தை மாலை 3.45 மணியளவில் அடைந்தது. அப்போது, முப்படைகளின் வீரர்கள் வாஜ்பாயின் பூத உடலை வாகனத்தில் இருந்து சுமந்து வந்தனர். அப்போது பேண்ட் வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. முப்படைத் தளபதிகள் விபின் ராவத், அட்மிரல் சுனில் லன்பா, வீரேந்தர் சிங் தனோவா ஆகியோர் வாஜ்பாய் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் மலர் வளையம் வைத்தனர். தொடர்ந்து, வாஜ்பாயின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்தனர். அதன்பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினார். அப்போது, அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். அதன்பிறகு , வாஜ்பாயின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசிய மூவர்ணக் கொடியை ராணுவ வீரர் மரியாதையுடன் வாஜ்பாயின் பேத்தி நிஹரிகாவிடம் ஒப்படைத்தார். இதைத் தொடர்ந்து, சந்தனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உடலை முப்படை வீரர்கள் கவனமாக எடுத்து தகனம் செய்யும் பகுதியில் வைத்தனர். 
வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க வாஜ்பாயின் உடலுக்கு வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா, அவரது பேத்தி நிஹரிகா, மருகமன் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
வாஜ்பாயின் உடல் சந்தனக் கட்டைகள் வைக்கப்பட்ட தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, உறவினர்கள் சோகத்தில் கண்ணீர் மல்கினர். வாஜ்பாயின் சிதைக்கு அவரது வளர்ப்பு மகள் நமீதா கௌல் பட்டாச்சார்யா தீ மூட்டினர். அப்போது, ராணுவ வீரர்கள் 21 குண்டுகளை வெடிக்கச் செய்து முழு மரியாதை அளித்தனர். இறுதிச் சடங்கில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com