இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் சர்ச்சை - நவ்ஜோத் சிங் சித்து விளக்கம்

இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்றது சர்ச்சை ஏற்படுத்தியதை அடுத்து இந்தியா திரும்பிய நவ்ஜோத் சிங் சித்து ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கம் அளித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்றது சர்ச்சை ஏற்படுத்தியதை அடுத்து இந்தியா திரும்பிய நவ்ஜோத் சிங் சித்து ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கம் அளித்தார். 

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சித்து கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இஸ்லாமாபாதில் சனிக்கிழமை நடைபெற்ற இம்ரான் கான் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று சித்துவும் கலந்து கொண்டார். முதல் வரிசையில் முக்கிய பிரமுகர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் நவ்ஜோத் சித்து அமர்ந்திருந்தார். அவரது அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிபர் மசூத் கானும் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில், இம்ரான் கான் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பாஜ்வா வந்தார். அப்போது அவர் சித்து அமர்ந்திருக்கும் இடத்துக்கு நேராக சென்று, அவரை ஆரத்தழுவி நட்பு பாராட்டினார். பரஸ்பரம் இருவரும் சிறிது நேரம் சிரித்துப் பேசினர். இதன்பின்னர், மீண்டும் ஒருமுறை நவ்ஜோத் சித்துவை பாகிஸ்தான் தளபதி ஆரத்தழுவினார்.

இதில், சித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிபர் மசூத் கான் அருகே அமர்ந்ததும், ராணுவ தலைமை தளபதி பாஜ்வா ஆரத்தழுவியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு திரும்பிய நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

"ஒருவர் என்னிடம் வந்து "நாம் இருவரும் ஒரே கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள். குரு நானக் தேவ்வின் 550-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கர்தார்பூர் எல்லையை நாம் திறப்போம்" என்று கூறினால் நான் என்ன செய்வது. 

ஒரு விழாவுக்கு கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டால், அவர்கள் கூறும் இடத்தில் தான் நாம் அமரவேண்டும். நான் வேறு ஒரு இடத்தில் அமர்ந்திருந்தேன். அவர்கள் தான் என்னை அழைத்து அங்கு அமருமாறு கேட்டுக்கொண்டார்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com