ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதம்

ரஃபேல் போர் ரக விமான ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு அனில் அம்பானி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். 
ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதம்

ரஃபேல் போர் ரக விமான ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு அனில் அம்பானி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானிக்கு சாதகமாக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டிவந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த தொடர் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் அனில் அம்பானி ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனிப்பட்ட முறையில் வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து வேதனை தெரிவித்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கை விளக்கும் வகையில், ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதத்தில், "ரஃபேல் போர் ரக விமானங்கள் டசால்ட் நிறுவனமும் ரிலையன்ஸ் நிறுவனமும் இணைந்தோ அல்லது ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் தன்னிச்சையாகவே தயாரிக்கவில்லை. 

ஏப்ரல் 10, 2015-இல் 36 போர் விமானங்கள் பிரான்ஸில் இருந்து வாங்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் 10 தினங்களுக்கு முன் தான் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது என்று கூறுவது சரியான தகவல் அல்ல. அது சிறிதளவும் தொடர்பே இல்லாத பொய்யான குற்றச்சாட்டாகும். 

ரஃபேல் விமானம் வாங்கும் எண்ணம் தோன்றுவதற்கு முன்பே டிசம்பர் 2014 - ஜனவரி 2015 -இல் ரிலையன்ஸ் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் தொடங்குவது குறித்தான முடிவு அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 201-இல் தேசிய பங்குச் சந்தை நிறுவனங்களிடம் இதுதொடர்பாக தெரிவித்துவிட்டோம்" என்றார். 

இந்த விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மொத்தமுள்ள 36 போர் விமானங்களும் 100 சதவீதம் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த 36 ரஃபேல் போர் விமானங்களில் ஒரு ரூபாய் மதிப்புள்ள உபகரணத்தை கூட ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கவில்லை என்பதை அனில் அம்பானி தெளிவுபடுத்தியுள்ளார். 

போதிய அனுபவமின்மை என்று வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொருத்தமற்றவை. 

இந்த ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் பெறுவதாக கூறப்படுவது கற்பனையும், உள்நோக்கத்துடனும் பரப்பப்படும் தவறான செய்தி. 

இவ்விவகாரத்தில், இந்திய அரசின் ஏற்றுமதி/இறக்குமதி கொள்கை விவகாரங்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே ரிலையன்ஸ் நிறுவனம் செயல்பட்டுள்ளது. மற்றபடி, பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கும் ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கும் இடையே 36 ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பாக எந்தவித ஒப்பந்தமும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com