அனைவரையும் அரவணைத்து வழிநடத்தியவர் வாஜ்பாய்: குலாம் நபி ஆஸாத் புகழாரம்

கட்சி பேதமின்றி அனைவரையும் அரவணைத்து, வழிநடத்திச் சென்றவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் புகழாரம் சூட்டியுள்ளார்.
அனைவரையும் அரவணைத்து வழிநடத்தியவர் வாஜ்பாய்: குலாம் நபி ஆஸாத் புகழாரம்


கட்சி பேதமின்றி அனைவரையும் அரவணைத்து, வழிநடத்திச் சென்றவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் புகழாரம் சூட்டியுள்ளார்.
வாஜ்பாய்க்கு நினைவஞ்சலி செலுத்தும் கூட்டம், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் பேசியதாவது:
சில தலைவர்கள் நல்ல விஷயங்களை கூறினாலும், அது இரைச்சல் போல இருக்கும். ஆனால், விமர்சனங்கள், எதிர்க் கருத்துகளைக் கூட அழகான மொழியில் எடுத்துரைப்பார் வாஜ்பாய். அது, அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்.
பி.வி.நரசிம்மராவ் தலைமயிலான அரசின் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக நான் இருந்தேன். அப்போது, எதிர்க்கட்சியின் முக்கியத் தலைவராக வாஜ்பாய் இருந்தார். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் சமயங்களில், ஒரு நாளில் பலமுறை நாங்கள் சந்தித்துக் கொள்வோம். ஒன்றாகவே தேநீர் அருந்துவோம்; ஒன்றாக சாப்பிடுவோம்.
இப்போது இருப்பதைப் போல (பிரதமர் மோடி தலைமையிலான அரசு), ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி அந்தக் காலத்தில் இல்லை. கட்சி பேதமின்றி அனைவரையும் தன்னுடன் அரவணைத்துச் சென்றவர் வாஜ்பாய்.
கட்சி பேதமின்றி, சித்தாந்த பேதமின்றி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்து ஒரே மேடையில் கூடியிருப்பது அரிதான நிகழ்வாகும். வாஜ்பாய் தனது மறைவுக்குப் பிறகும் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளார்.
நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பாடுபட்ட ஜவாஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், மெளலானா அபுல் கலாம், இந்திரா காந்தி போன்ற தலைவர்களைப் போல் வாஜ்பாயும் என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்றார் குலாம் நபி ஆஸாத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com