ஆகஸ்ட் மாதம் அடித்த அதிர்ஷ்டம் பெங்களூருவுக்கு செப்டம்பரில் இருக்காதாம்: இயற்கைப் பேரிடர் கண்காணிப்பு மையம்

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடகு, கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் கேரள மாநிலமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.
ஆகஸ்ட் மாதம் அடித்த அதிர்ஷ்டம் பெங்களூருவுக்கு செப்டம்பரில் இருக்காதாம்: இயற்கைப் பேரிடர் கண்காணிப்பு மையம்


ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடகு, கேரளா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் கேரள மாநிலமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.

குடகு மாவட்டத்தில் பெய்து கன மழை காரணமாக கடுமையான நிலச்சரிவை அந்த மாவட்டம் சந்தித்துள்ளது. அதே போல கேரள மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகி, தற்போதுதான் நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

ஆனாலும், பெங்களூருவில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தென்மேற்குப் பருவ மழையில் பெங்களூரு தப்பித்தாலும் இந்த அதிர்ஷ்டம் செப்டம்பர் மாதம் கைகொடுக்காது என்று கர்நாடக மாநில இயற்கைப் பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, கர்நாடக மாநிலத்தில் செப்டம்பர் மாதம் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், ப்ருஹத் பெங்களூரு மாநகர பலிகே என்ற மாவட்ட நிர்வாகம், தற்போதுதான் மழை நீர் வடிகால்களை தூர்வாருதல், நீர் நிலைகளில் செய்யப்பட்டிருக்கும் ஆக்ரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளை கையில் எடுத்துள்ளது. இதனால், கடந்த ஆண்டைப் போலவே மிக மோசமான வெள்ளத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெங்களூருவில் 383 மி.மீ. மழை பதிவானது. இயல்பான அளவு 179 மி.மீ. என்ற நிலையில் அதிகப்படியான மழையால் நகரமே வெள்ளக்காடானது.

இந்த நகரம் இன்று வரை பாதுகாப்பான பகுதியாக இல்லை. அபாய கட்டத்திலேயே உள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால், ஆக்ரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கிவிட்டதால் இந்த முறை பெங்களூருவில் வெள்ளம் ஏற்படாது என்று மாவட்ட நிர்வாகம் உறுதியாகக் கூறுகிறது. 

இவர்களது உறுதியை ஏற்க மறுக்கும் பிற துறை அதிகாரிகள், கடந்த ஓராண்டாக இவர்கள் எதையும் செய்யாமல் நில அளவைக்காக காத்திருந்தார்கள். ஆனால் இயற்கைப் பேரிடர் எதற்காகவும் காத்திருக்காது என்கிறார்கள் தெளிவாக.

பெங்களூருவில் தற்போதிருக்கும் 160 ஏரிகளில் 141 ஏரிகள் பெங்களூரு மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இதில் 58 ஏரிகள் மட்டுமே தூர்வாரப்பட்டன. மற்ற ஏரிகளில் தூர்வாரும் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. நிச்சயம் செப்டம்பருக்குள் இந்த பணிகள் முடிய வாய்ப்பில்லை. 

இதனாலேயே ஏரிகளுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் கடந்த ஆண்டை போலவே வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று அஞ்சப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு பெங்களூரு மாவட்ட நிர்வாகம் ஒரே ஒரு வேலையை மட்டும் சரியாகச் செய்திருக்கிறது. அதாவது மழை நீர் வடிகால்வாய்களை சரியாக மூடியிருக்கிறது. இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்படலாம். கடந்த ஆண்டு மழை நீர் வடிகால்வாய்கள் மூடப்படாததால் பலர் சாக்கடையில் விழுந்த உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com