இப்போது தேர்தல் நடைபெற்றால் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: ஆய்வில் தகவல்

இப்போது தேர்தல் நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்; அதே நேரத்தில்


இப்போது தேர்தல் நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்; அதே நேரத்தில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையைவிட கூடுதல் 10 இடங்களில் வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.
தேசத்தின் இப்போதைய மனநிலை' என்ற தலைப்பில் கடந்த ஜூலை 18, 19-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இப்போது தேர்தல் நடைபெற்றால் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 281 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சி இப்போதைய கூட்டணியுடன் போட்டியிட்டால் 122 இடங்கள் மட்டுமே கிடைக்கும். அதே நேரத்தில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சிகளுக்கு 140 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வென்றது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் போதும் என்ற நிலையில் அப்போது பாஜக கூடுதலாக 10 இடங்களில் வெற்றி பெற்றது. மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் இப்போது 336 ஆக உள்ளது. 
இந்த தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைச் சந்தித்து 44 இடங்களில் மட்டுமே வெற்றது. 19 சதவீத வாக்குகளை மட்டும் காங்கிரஸ் தக்கவைத்தது.
அதே நேரத்தில் இப்போதைய சூழலில் பாஜக கூட்டணிக்கு 36 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 31 சதவீத வாக்குகளும் கிடைக்கும். இந்த இரு கூட்டணியிலும் இல்லாத பிற கட்சிகள் 33 சதவீத வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வென்றபோதிலும் 31 சதவீத வாக்குகளையே பெற்றது. பாஜக கூட்டணிக்கு 38.5 சதவீத வாக்குகள் கிடைத்தன. அப்போது காங்கிரஸ் கூட்டணி 23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.
அடுத்து பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்ற கேள்விக்கு 49 சதவீதம் பேர் நரேந்திர மோடியின் பெயரையே பரிந்துரைத்துள்ளனர். 27 சதவீதம் பேர் ராகுலுக்கும், 3 சதவீதம் பேர் பிரியங்கா காந்திக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com