என் மீதான விமர்சனங்களுக்கு தகுந்த பதிலளிப்பேன்: சித்து

பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியை ஆரத்தழுவிய விவகாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், என் மீதான விமர்சனங்களுக்கு தேவையேற்படும்போது
என் மீதான விமர்சனங்களுக்கு தகுந்த பதிலளிப்பேன்: சித்து

பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியை ஆரத்தழுவிய விவகாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், என் மீதான விமர்சனங்களுக்கு தேவையேற்படும்போது தகுந்த பதிலளிப்பேன்' என்று சித்து கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து ஒரே நபராக சித்து மட்டும் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி காமர் ஜாவத் பாஜ்வா-சித்து ஆரத்தழுவிக் கொண்டனர். அத்துடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் அதிபர் மசூத் கானுக்கு அருகே சித்து அமர்ந்திருந்தார்.
இந்த நிகழ்வுகளால் இந்தியாவில் சித்துவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், பஞ்சாப் முதல்வருமான அமரீந்தர் சிங்கும், சித்துவின் செயல் தவறு என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்து சித்து கூறியதாவது:
இம்ரான் பதவியேற்பு நிகழ்வில் என்னை நோக்கி வந்த பாஜ்வா, தாம் கிரிக்கெட் வீரராக விருப்பப்பட்டதாக கூறினார். மேலும், தாம் அமைதியை விரும்புவதாக கூறிய அவர், பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா கர்தார்பூர் சாஹிப்புக்கு இந்திய மக்கள் வருவதற்கான வழித்தடம் திறக்கபட வேண்டும் என்று பேசினார். குருநானக் பெயரை பயன்படுத்தும் ஒருவர், எந்த செயலைச் செய்யவும் முன்வருவார். பாகிஸ்தான் தரப்பிலிருந்து அன்பை வெளிப்படுத்தியதாக உணர்கிறேன். இந்த விவகாரத்தில் என்னை விமர்சிப்பவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். தேவையேற்படும்போது, விமர்சனங்களுக்கு தகுந்த பலமான பதிலளிப்பேன். அது, அனைவருக்குமான பதிலாக இருக்கும் என்று சித்து கூறினார்.
வழக்கு: இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதியை ஆரத்தழுவிய விவகாரம் தொடர்பாக சித்து மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யக் கோரி பிகார் மாநிலம் முசாஃபர்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் மீது வரும் 24-ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது.
ஆதரவு: இதனிடையே, சித்துவுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி எம்எல்ஏ சுக்பால் சிங் கைரா கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், சித்து செயலில் எந்தத் தவறும் இல்லை. பஞ்சாபிகள் சந்தித்துக்கொள்ளும்போது இவ்வாறு ஆரத்தழுவிக் கொள்வோம். பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப்புக்கு செல்வதற்கான வழித்தடத்தை திறக்க வேண்டும். அத்துடன், பஞ்சாபின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையையும் திறக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com