கேரள வெள்ளம் அதிதீவிர இயற்கைப் பேரிடர்': மத்திய அரசு அறிவிப்பு

கேரளத்தில் ஏற்பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புகளை, அதிதீவிர இயற்கைப் பேரிடர்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.
ஆலப்புழை மாவட்டம், செங்கன்னூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை ரப்பர் படகில் மீட்டு அழைத்து வரும் மீட்புக் குழுவினர்.
ஆலப்புழை மாவட்டம், செங்கன்னூரில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை ரப்பர் படகில் மீட்டு அழைத்து வரும் மீட்புக் குழுவினர்.

கேரளத்தில் ஏற்பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புகளை, அதிதீவிர இயற்கைப் பேரிடர்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்தது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கேரளத்தில் கடந்த 10 நாள்களாக பெய்த கனமழையால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளின் தீவிரத்தை கருத்தில்கொண்டு, அதிதீவிர இயற்கைப் பேரிடராக' அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள மாநில அரசுக்கு தேசிய அளவில் உதவிகள் கிடைக்கும். தேசிய பேரிடர் உதவி நிதியத்திலிருந்து கூடுதல் நிதியுதவி அளிக்கப்படும்.
இதேபோல், பேரிடர் நிவாரண நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் 3:1 என்ற அளவில் மத்திய அரசும் மாநில அரசும் பங்களிக்கும். இந்த நிதி போதாவிட்டால், மாநில அரசின் பங்களிப்பு இல்லாமல் மத்திய அரசே நிதியுதவி வழங்கும் என்றார் அந்த அதிகாரி.
முன்னதாக, கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புகளை, தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, இயற்கை பேரழிவை, தேசியப் பேரிடராக அறிவிப்பதற்கு உரிய சட்ட விதிமுறைகள் இல்லை; தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கேரள வெள்ள பாதிப்புகளை அதிதீவிர இயற்கைப் பேரிடராக கருதி நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மறுசீரமைப்பு, தொற்றுநோய் தடுப்புப் பணிகள்: கேரளத்தில் திங்கள்கிழமை மழை சற்று ஓய்ந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வீடிழந்து தவிக்கும் மக்களின் மறுவாழ்வுக்கான பணி அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் 5,645 முகாம்களில் 7.24 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், எளிதில் அணுக முடியாத இடங்களில் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிக பாதிப்பைச் சந்தித்த ஆலப்புழை மாவட்டம், செங்கன்னூர் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற நிவாரணப் பொருள்களை விநியோகிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக ராணுவத்தின் தெற்கு பிராந்திய தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் டி.ஆர்.சோனி கூறுகையில், மாநிலம் முழுவதும் சுமார் 1,500 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எளிதில் அணுக முடியாத இடங்களில் தவிப்போரை கண்டறிய ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன' என்றார்.
பலி எண்ணிக்கை உயர்வு: இதனிடையே, எர்ணாகுளம் மாவட்டம், பரவூர் பகுதியில் மேலும் 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 216-ஆக அதிகரித்திருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ வி.டி.சதீஸன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், பரவூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய பெரும்பாலானோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். தற்போது புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, மக்களை மீண்டும் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன' என்றார்.
இதேபோல், மின் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகத்தை சீர்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கேரள குடிநீர் ஆணையமும், மின் வாரியமும் தெரிவித்துள்ளன.
விமானச் சேவை தொடக்கம்: கொச்சி சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், அங்குள்ள கடற்படைக்கு சொந்தமான விமான நிலையத்திலிருந்து பயணிகள் விமான சேவை திங்கள்கிழமை தொடங்கியது. 
மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் கொச்சி துறைமுகத்தை வந்தடையத் தொடங்கியுள்ளன.
ரயில் சேவை தொடக்கம்: இதனிடையே, திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து ரயில் சேவைகள் பகுதியளவு தொடங்கப்பட்டுள்ளன.


தொடர்ந்து குவியும் நிதியுதவி!
 மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு நாடு முழுவதும் இருந்து நிதியுதவியும், பிற உதவிகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மாநிலங்களவையின் மூத்த அதிகாரிகள் ஆகியோர், தங்களது ஒரு மாத ஊதியத்தை கேரளத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இத்தகவலை, சுட்டுரையில் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். அவரது மாத ஊதியம் ரூ.4 லட்சம் ஆகும்.
இதேபோல், அனைத்து எம்.பி.க்களும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று வெங்கய்ய நாயுடுவும், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் கேரளத்துக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்துள்ளனர்.
அஸ்ஸாம் ரூ.3 கோடி அறிவிப்பு: தமிழகம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் என பல்வேறு மாநிலங்கள் கேரளத்துக்கு ஏற்கெனவே நிதியுதவி அறிவித்துள்ள நிலையில், அஸ்ஸாம் மாநில அரசு சார்பில் திங்கள்கிழமை ரூ.3 கோடி அறிவிக்கப்பட்டது.
2,500 டன் அரிசி: சத்தீஸ்கர் அரசு சார்பில் கேரளத்துக்கு ரூ.7.5 கோடி மதிப்பிலான 2,500 டன் அரிசி சிறப்பு ரயில் மூலம் திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. மேலும், கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.2.5 கோடி உடனடியாக வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் தெரிவித்துள்ளார். கேரளத்துக்கு மருத்துவ குழுக்களை அனுப்பவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் என 100 பேர் அடங்கிய குழு, இரு விமானங்களில் திருவனந்தபுரத்துக்கு திங்கள்கிழமை சென்றது. அவர்களுடன், மகாராஷ்டிர மருத்துவ கல்வித் துறை அமைச்சர் கிரிஷ் மகாஜனும் சென்றார். மகாராஷ்டிர அரசு சார்பில் ஏற்கெனவே ரூ.20 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர அரசு ஊழியர்கள் ரூ.20 கோடி: கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஆந்திர அரசு ஊழியர்களின் சங்கம் சார்பில் ரூ.20 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஒடிஸாவைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, கேரளத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்த ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ஒடிஸா மாநில தீயணைப்புப் படையினர் அடங்கிய சிறப்புக் குழுவையும் அனுப்பிவைத்தார்.
இதனிடையே, 10 லட்சம் பால் பாக்கெட்டுகள், 500 டன் கால்நடைத் தீவனங்கள், கால்நடைகளுக்கான மருந்துகள் ஆகியவற்றை குஜராத்தில் செயல்படும் தேசிய பால்பொருள் மேம்பாட்டு வாரியம் திங்கள்கிழமை அனுப்பிவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com