நீரவ் மோடி பிரிட்டனில் இருப்பது உறுதி: இந்தியா அழைத்து வர சிபிஐ நடவடிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,578 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு சிபிஐ-ஆல் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் நீரவ் மோடி பிரிட்டனில் இருப்பதை அந்நாடு உறுதி செய்துள்ளது.
நீரவ் மோடி பிரிட்டனில் இருப்பது உறுதி: இந்தியா அழைத்து வர சிபிஐ நடவடிக்கை


பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,578 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு சிபிஐ-ஆல் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் நீரவ் மோடி பிரிட்டனில் இருப்பதை அந்நாடு உறுதி செய்துள்ளது. இதையடுத்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவதற்கான நடைமுறைகளை சிபிஐ தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
நீரவ் மோடி தங்களது நாட்டில் இருப்பதை பிரிட்டன் உறுதி செய்ததை அடுத்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வலியுறுத்துவதற்கான கோரிக்கை கடிதத்தை உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளோம். அந்த கோரிக்கைக் கடிதம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வாயிலாக பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதனிடையே, நீரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் மூலமாக அளிக்கப்பட்டுள்ள ரெட் கார்னர் நோட்டீஸ்' (தேடப்படும் நபரை பிடித்து ஒப்படைக்கக் கோருவது) அடிப்படையில், அவரைக் கைது செய்யுமாறு பிரிட்டன் அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
இன்டர்போல் மூலமாக ஒருவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் பட்சத்தில், அவர் தேடப்படும் குற்றவாளியாகிறார். இதன்மூலமாக, நீரவ் மோடியை கண்டறியும் பட்சத்தில், அவரைப் பிடித்து ஒப்படைக்குமாறு தனது 192 உறுப்பு நாடுகளுக்கு இன்டர்போல் அமைப்பு அறிவுறுத்தும். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோருவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்.
வைர வியாபாரியான நீரவ் மோடி, வங்கிக் கடன் உத்தரவாதக் கடிதங்களின் மூலமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,578 கோடி கடன் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த கடன் மோசடி அம்பலமாவதற்கு சில வாரங்கள் முன்பாக நீரவ் மோடி, அவரது மனைவி அமி மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி, உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறினர்.
இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வரும் நிலையில், மெஹுல் சோக்ஸி ஆண்டிகுவா குடியுரிமை பெற்று அந்நாட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.
நீரவ் மோடியின் கடவுச்சீட்டை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்த பிறகும் அவர் 6 நாடுகளிடையே பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறியிருந்தார். இந்நிலையில், நீரவ் மோடி பிரிட்டனில் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்நாட்டு அரசு அதை உறுதி செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com