பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார்: இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி கடிதம்

பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா தயாராய் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார்: இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி கடிதம்


பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா தயாராய் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இதை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் கடந்த 18ஆம் தேதி பதவியேற்றார். அன்றைய தினத்தில் அவருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு தமது வாழ்த்துகளை மோடி தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாகிஸ்தானுடன் சிறப்பான இருதரப்பு உறவை கட்டமைக்க இந்தியா உறுதி பூண்டிருப்பதாகவும், தெற்காசியப் பிராந்திய மக்களின் நலனுக்காக பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்தியா தயாராய் இருப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
இம்ரான் கானை கடந்த மாதம் 30ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததையும், அப்போது இருவரும் இந்திய துணைக் கண்டத்தை பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் இல்லாத அமைதி, பாதுகாப்பு, அபிவிருத்தி நிறைந்த பகுதியாக மாற்றுவது குறித்து பேசியதையும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ள ஆட்சி மாற்றத்தின் மூலம், அந்நாட்டில் ஜனநாயகமும், ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையும் வலுப்படும் என்றும் அந்த கடிதத்தில் மோடி தெரிவித்துள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிட்டன.
பாகிஸ்தான் மறுப்பு: இதனிடையே, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரிடம் மோடியின் கடிதம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், மோடியின் கடிதத்தில் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையின் மூலமே, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படும் எனத் தெரிவித்திருந்தார். அதே போன்ற கருத்துதான், மோடியின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.
பாகிஸ்தான் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் பேட்டி: இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ஷா மகமுது குரேஷி, இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுடனான உறவை புதுப்பிக்க பாகிஸ்தான் விரும்புகிறது; காஷ்மீர் உள்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் பாகிஸ்தான் விரும்புகிறது. இதற்கு இரு நாடுகளுக்கும் இடையே எந்த இடையூறுமின்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இரு நாடுகளும் எத்தகைய சாகச நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது' என்றார்.
இந்திய பிரதமராக பதவியேற்றதும் பிரதமர் மோடி, பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் பயணம் மேற்கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியத் தலைவர் ஒருவர் பாகிஸ்தானுக்கு சென்றது அதுவே முதல்முறையாகும். இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்படும் என்று இரு நாட்டு மக்களாலும் நம்பப்பட்டது.
இதனிடையே, இந்தியாவில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2016ஆம் ஆண்டு அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தினர். இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை பொய் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் கைது செய்தது.
இதுபோன்ற சம்பவங்களால், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது. இதனால், பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கையை எடுக்காத வரையில், அந்நாட்டுடன் எத்தகைய பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டோம் என்று இந்தியா உறுதியாக அறிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com