வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிர்ப்பு: செப்.28-இல் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம்

ஃபிளிப்கார்ட்டை வால்மார்ட் நிறுவனம் வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 28-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) முடிவு செய்துள்
வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிர்ப்பு: செப்.28-இல் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம்


ஃபிளிப்கார்ட்டை வால்மார்ட் நிறுவனம் வாங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 28-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) முடிவு செய்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை ரூ.1,07,650 கோடிக்கு கடந்த மே மாதம் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் வாங்கியது. கடந்த 2007-ஆம் ஆண்டு சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இப்போதைய மதிப்பு சுமார் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாகும்.
மேலும், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் ரூ.13,000 கோடியை முதலீடு செய்ய வால்மார்ட் திட்டமிட்டுள்ளது. இ-காமர்ஸ் துறையில் கடும் போட்டி நிலவி வருவதால் ஃபிளிப்கார்ட் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறது. விற்பனை தொடர்ந்து அதிகரித்தாலும் அதைவிட வேகமாக நஷ்டம் அதிகரித்தே வருகிறது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நஷ்டம் சுமார் ரூ.8,000 கோடியாகும்.
இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி இல்லை. எனினும், வால்மார்ட் நிறுவனம் பின்வாசல் வழியாக இந்திய சில்லறை சந்தையில் நுழைய மத்திய அரசு அனுமதித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 200-கக்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் வால்மார்ட் நிறுவனம் ஃபிளிப்கார்ட்டை வாங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செப்டம்பர் 28-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, செப்டம்பர் 15-ஆம் தேதி எதிர்ப்பு ரத யாத்திரை மேற்கொள்ளவும், டிசம்பர் 16-இல் பொதுக் கூட்டம், பேரணிகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
சிறு வர்த்தகர்களின் நலன்களைக் காப்பதாக அளித்த வாக்குறுதியை மத்திய அரசு காப்பாற்றவில்லை என்று கூட்டத்தில் பங்கேற்ற வர்த்தக சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com