ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: குற்றப்பத்திரிக்கையை ஊடகங்களில் கசிய விட்டதாக சிபிஐ மீது சிதம்பரம் வழக்கு 

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிக்கையை உள்நோக்கத்துடன் ஊடகங்களில் கசிய விட்டதாக சிபிஐ மீது ப.சிதம்பரம் வழக்குத் தொடுத்துள்ளார்.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: குற்றப்பத்திரிக்கையை ஊடகங்களில் கசிய விட்டதாக சிபிஐ மீது சிதம்பரம் வழக்கு 

புது தில்லி: ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிக்கையை உள்நோக்கத்துடன் ஊடகங்களில் கசிய விட்டதாக சிபிஐ மீது ப.சிதம்பரம் வழக்குத் தொடுத்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த பொழுது   ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு  விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நிறுவனம் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

குறிப்பாக அப்பொழுது நடைமுறையில் இருந்த அந்நிய முதலீடு தொடர்பான நடைமுறை விதிகளை ப.சிதம்பரம் தெரிந்தே மீறியதாக சிபிஐ திங்ககன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விதிமீறல் நடைபெற்ற காலகட்டத்தில், வெளிநாட்டு முதலீடு வளர்ச்சி வாரியத்தின் கூடுதல் செயலாளராக இருந்த அசோக் சாவ்லா, இணைச் செயலாளர் சஞ்சய் கிருஷ்ணா, செயலாளர்கள் ராம் ஷரன், மற்றும் தீபக் குமார் மற்றும் அப்போதைய பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் அசோக் ஜா உள்ளிட்டோரும் சிதம்பரத்துடன் சேர்ந்து இந்த சதியில் ஈடுபட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வியாபார பரிவர்த்தனையில் ஏர்செல் நிறுவனத்தின் பத்து ரூபாய் முகமதிப்பு கொண்ட18 கோடி பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட ஒவ்வொரு பங்கும் சுமார் 198 ரூபாய் சந்தை விலைக்கு வாங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மொத்த முதலீடு சுமார் 3,650 கோடி ரூபாயாகும்.

அப்போது அந்நிய முதலீடு தொடர்பாக நடைமுறையில் இருந்த அரசு ஆணையின்படி நிதி அமைச்சரால் தனிப்பட்ட வகையில் 600 கோடி ரூபாய் வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டுமே அனுமதியளிக்க முடியும். இதற்கு மேல் உள்ள முதலீடுகள் என்றால் அந்த பரிவர்த்தனைகள் எல்லாம்  பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இதற்கு மாறாக ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில், 3,650 கோடி ரூபாய் முதலீடு என்பது மறைக்கப்பட்டு வெறும் 180 கோடி ரூபாய் மட்டுமே முதலீடாக காட்டி சிதம்பரமே அனுமதியளித்துள்ளதாக  சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஏர்செல்-மேக்சிஸ் முதலீட்டிற்கு, ப.சிதம்பரம் தெரிந்தே விதிமுறைகளை மீறி அனுமதியளித்து தவறு செய்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டி இருந்தது.

இந்நிலையில் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிக்கையை உள்நோக்கத்துடன் ஊடகங்களில் கசிய விட்டதாக சிபிஐ மீது ப.சிதம்பரம் வழக்குத் தொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் சார்பாக தில்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் துபே மற்றும் அக்ஸ்தீப் சிங் இருவரும் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

திங்களன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையினை நீதிமன்றமே இன்னும் முழுமையாக பரிசீலிக்கவில்லை. ஆனால் அதற்குள் சிபிஐ தரப்பிலிருந்து குற்றப்பத்திரிக்கையானது குறிப்பிட்ட செய்தித்தாளொன்றுக்கு கசிய விடப்பட்டுள்ளது. அந்த பத்திரிக்கையானது குற்றப்பத்திரிக்கையினை பகுதி பகுதியாக வெளியிட்டு வருகிறது. இதன்மூலம் இந்த செய்தியை பரபரப்பாக்குவதும், நீதிமன்றமே இன்னும் முழுமையாக பரிசீலிக்காத நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஒரு மனநிலையினை ஏற்படுத்துவதும் மட்டுமே நடக்கிறது.

இவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது சிபிஐ இந்த விவகாரத்தில் நேர்மையான நீதிமன்ற விசாரணையை விரும்பவில்லை என்பதும், பரபரப்பான ஊடக விசாரணையினை மட்டுமே விரும்புவதும் தெளிவாகிறது.  

இதன் காரணமாக சிபிஐயானது நீதித்துறை செயல்பாடுகளை கேலி செய்வதுடன், நீதியினை பரிகாசம் செய்வது போல அமைநதுள்ளது.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி சைனி, சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு வழக்கினை அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com