அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மறு வாய்ப்பு: சாதக  பாதகங்கள் குறித்து அறிக்கை தர உத்தரவு  

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) விடுபட்டோருக்கு மறு வாய்ப்பு தருவதில் உள்ள சாதக  பாதகங்கள் குறித்து அறிக்கை தருமாறு, திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.   
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் மறு வாய்ப்பு: சாதக  பாதகங்கள் குறித்து அறிக்கை தர உத்தரவு  

புது தில்லி: அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) விடுபட்டோருக்கு மறு வாய்ப்பு தருவதில் உள்ள சாதக  பாதகங்கள் குறித்து அறிக்கை தருமாறு, திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.   

வங்கதேசத்தவர்கள் இந்தியாவில் ஊடுருவி அஸ்ஸாமில் தலைமுறைகளை கடந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், அங்கு வாழும் உண்மையான இந்தியக் குடிகளை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டது. அதன் வரைவுப் பட்டியல் ஜூலை 30-ஆம் தேதி வெளியானபோது அதில் 40 லட்சம் பேரின் பெயர் விடுபட்டிருந்தது. இதில், சுமார் 37.59 லட்சம் பேரின் பெயர் நிராகரிக்கப்பட்ட நிலையில், 2.48 லட்சம் பேரின் பெயர்கள் நிலுவையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்பொழுது என்ஆர்சி வரைவு பட்டியலில் விடுபட்டு அதுதொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் அளிக்கும் 40 லட்சம் பேரின் பயோமெட்ரிக் தகவல்களை பெற்று, அதன் மூலமாக தனித்துவ அடையாளம் உருவாக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் கடந்த 14-ஆம் தேதி மத்திய அரசு கூறியிருந்தது. மேலும், என்ஆர்சி இறுதிப் பட்டியல் வெளியான பிறகு அதில் இடம்பெற்றவர்களுக்கு இந்தியருக்கான அடையாளமாக ஆதார் எண் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

அப்பொழுது அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்ஆர்சி) வரைவுப் பட்டியலில் விடுபட்டவர்களின் சதவீதத்தை மாவட்ட வாரியான தகவல்களாக சமர்ப்பிக்குமாறு அஸ்ஸாம் என்ஆர்சி ஒருங்கிணைப்பாளருக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

அந்தத் தகவல்களை சீலிடப்பட்ட உரையில் சமர்ப்பிக்குமாறு கூறிய நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் கருத்துகளை கோர மறுப்பு தெரிவித்துவிட்டது. 

எனினும், என்ஆர்சி விவகாரத்தில் மத்திய அரசின் நடைமுறைகள் குறித்து இந்திய பதிவுத் துறை தலைவர், அஸ்ஸாம் என்ஆர்சி ஒருங்கிணைப்பாளர், அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம், அனைத்து அஸ்ஸாம் சிறுபான்மையின மாணவர்கள் சங்கம் ஜாமியத் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து தரப்பினரும் பதில் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

அத்துடன், என்ஆர்சி வரைவுப் பட்டியலை பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் அதன் நகல்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அஸ்ஸாம் என்ஆர்சி ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அஸ்ஸாம் என்ஆர்சி விவகாரத்தில் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கும் விண்ணப்பங்கள் வரும் 20-ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 30-ஆம் தேதி முதல் பெற வேண்டும் என்றும் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அதன்படி செவ்வாயன்று இந்த வழக்கானது மீண்டும் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள் கூறியதாவது:

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) விடுபட்ட 40 லட்சம் பேருக்கும் மறு வாய்ப்பு தருவதில் உள்ள சாதக  பாதகங்கள் உள்ளிட்டட அனைத்து அம்சங்கள் குறித்தும், அஸ்ஸாம் என்ஆர்சி ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா விரிவான அறிக்கை தர வேண்டும்.

இந்த அறிக்கையானது வரும் செப்டம்பர் 4-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முக்கியமாக நீதிமன்றத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

இந்த பதிவேட்டில் தங்களுக்கு உள்ள கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை பொதுமக்கள் தெரிவிக்கும் விண்ணப்பங்களைப் பெறும் தேதியானது  முன்னர் உத்தரவிட்ட 30-ஆம் தேதியிலிருந்து தள்ளி வைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கினை செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com