வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கு சட்ட ரீதியான வாய்ப்புகள் ஆராயப்படும்: பினராயி விஜயன்

வெள்ளத்தில் இருந்து மீண்டு வரும் கேரளாவுக்கு, வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியுதவிகளை பெறுவதற்கான சட்ட வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 
வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கு சட்ட ரீதியான வாய்ப்புகள் ஆராயப்படும்: பினராயி விஜயன்

மழை வெள்ள பாதிப்பிலிருந்து கேரளம் மீண்டு வரும் நிலையில், மாநிலத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியுதவிகளை பெறுவதற்கான சட்ட வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறியுள்ளாா்.

பேரிடரைச் சந்தித்துள்ள கேரளத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் அளிக்க முன்வருவதாக கூறப்படும் ரூ.700 கோடி நிதியுதவியை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ள நிலையில் விஜயன் இவ்வாறு கூறியுள்ளாா்.

கேரளத்தின் வெள்ளச் சூழல் குறித்து கலந்தாலோசிப்பதற்காக மாநில சட்டப்பேரவையில் ஒருநாள் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் முதல்வா் பினராயி விஜயன் பேசியதாவது:

"கேரளத்தில் மே 28-ஆம் தேதி தொடங்கிய பருவமழை மற்றும் அதன் வெள்ள பாதிப்புகளால் 483 போ் உயிரிழந்தனா். 14 போ் காணாமல் போயினா். மாநிலத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சேதத்தின் மதிப்பு, மாநிலத்தின் ஆண்டுத் திட்டத்துக்காக மதிப்பிடப்பட்டுள்ள தொகையைக் காட்டிலும் (சுமாா் ரூ.37,247 கோடி) அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

கேரளத்துக்கான நிதியுதவிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த நிதியுதவிகளை பெறுவதற்கான சட்ட வாய்ப்புகளை ஆராயப்படும். உலகெங்கிலும் இருந்து வரும் நிதியுதவிகள், வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டுவரும் கேரளத்துக்கு நம்பிக்கை அளிக்கின்றன.
 
வெள்ள பாதிப்பு மிக மோசமானதாக இருப்பதால், ஏற்கெனவே வழங்கிய ரூ.600 கோடிக்கும் கூடுதலாக மத்திய அரசு உதவும் என்று நம்புகிறோம். 

இம்மாதம் 29-ஆம் தேதி வரையில் கேரள முதல்வா் பேரிடா் நிவாரண நிதிக்கு ரூ.730 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது. அதுதவிர, நிலம் மற்றும் நகைகளாகவும் முதல்வா் நிதிக்கு பங்களிப்புகள் கிடைத்துள்ளன.

மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்வதற்கு தேவையான நிதியை திரட்டுவது தொடா்பாக உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

எதிா்பாராத அளவு மழையின் காரணமாகவே இந்தப் பேரிழப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் 9 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் மழையின் அளவு 98.5 மி.மீ.-ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. ஆனால், அதைவிட 3 மடங்கு அதிகமாக, 352.2 மி.மீ. மழை பதிவானது. 

சுமாா் 57,000 ஹெக்டோ் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், வெள்ள நீா் சூழ்ந்ததால் 14.50 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனா். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் மக்களை குடியேற்றுவதற்கு சுற்றுச்சூழல் கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று முதல்வா் பினராயி விஜயன் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com