மகாராஷ்டிர போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐவர் கைதுக்கு அருந்ததி ராய், ஜிக்னேஷ் மேவானி கண்டனம்  

மகாராஷ்டிரா பீமா- கோரேகான் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் சம்பவம் தொடர்பாக, இடதுசாரி ஆதரவாளா்கள் ஐவரை கைது செய்ததற்கு அருந்ததி ராய், ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனா்.
மகாராஷ்டிர போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐவர் கைதுக்கு அருந்ததி ராய், ஜிக்னேஷ் மேவானி கண்டனம்  

மகாராஷ்டிரா பீமா- கோரேகான் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் சம்பவம் தொடர்பாக, இடதுசாரி ஆதரவாளா்கள் ஐவரை கைது செய்ததற்கு அருந்ததி ராய், பிரஷாந்த் பூஷன், ஜிக்னேஷ் மேவானி, அருணா ராய் உள்ளிட்டோர் தில்லியில் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தனா்.

இடதுசாரி ஆா்வலா்களின் கைதுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் தில்லி பிரஸ் கிளப்பில் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் சங்கம்(பியுடிஆா்), சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் (பியுசிஎல்) ஆகிய அமைப்புகள் வியாழக்கிழமை  பத்திரிகையாளா் சந்திப்பொன்றை ஒழுங்கு செய்திருந்தன. 

இந்த பத்திரிகையாளா் சந்திப்பில் எழுத்தாளா் அருந்ததி ராய், குஜராத் சட்டப்பேரவை உறுப்பினரும் தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி, வழக்குரைஞா் பிரஷாந்த் பூஷன், சமூக ஆா்வலா் அருணா ராய், துப்புரவுத் தொழிலாளா் சங்கத் தலைவா் பெஸ்வாடா வில்சன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்த செய்தியாளா் சந்திப்பில் அருந்ததி ராய் பேசியதாவது: 

"மோடி அலை நாடு முழுவதும் நீா்த்துப் போயுள்ள நிலையில், மாற்றுக் கருத்துக்களை நசுக்கும் முயற்சியில் மோடி, அமித் ஷா கூட்டணி ஈடுபட்டுள்ளது. இவா்களால் மக்கள் மனங்களில் பயம் விதைக்கப்படுகிறது. 

இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவளிக்காதவா்கள் போலியான குற்றச்சாட்டுக்கள் செலுத்தப்பட்டு கைது செய்யப்படுகிறாா்கள். 

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. தற்போதைய இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தவராக, தலித்தாக இருப்பதெல்லாம் குற்றமாகப் பாா்க்கப்படுகிறது. 

தோ்தல் லாபங்களுக்காக இந்தக் கைதுகளை மத்திய அரசு மேற்கொள்கிறது. 2019- மக்களவைத் தோ்தல் வரை தொடா் கைதுகளாகவே இருக்கும்" என்றாா் அவா்.

வழக்குரைஞா் பிரஷாந்த் பூஷன் கூறியதாவது: 

"மனித உரிமைகள் மீது சிறிது சிறிதாக தாக்குதல் நடத்தி, இந்திய ஜனநாயகத்தை அழிக்க முற்படுகிறாா்கள்" என்றாா். 

குஜராத் சட்டப்பேரவை உறுப்பினரும் தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி கூறியதாவது: 

"மக்கள் எதிா்கொள்ளும் உண்மையான பிரச்னைகளை திசை திருப்பும் வகையில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமா் மோடியை மாவோயிஸ்டுகள் கொல்லத் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுவது அனுதாப வாக்குகளைப் பெறுவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தியாகும்.

தலித் எழுச்சியை சிதைக்கும் வகையிலான மத்திய அரசின் நடவடிக்கைகள் வெற்றி பெறாது. செப்டெம்பா் 5- ஆம் தேதி நாட்டின் பல பாகங்களில் தலித்துக்கள் மத்திய அரசுக்கு எதிராகப் போரட்டம் நடத்தவுள்ளனா்" என்றாா் அவா்.

இடதுசாரி ஆா்வலா்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து இவா்களால்  கூட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பொய்யான காரணங்களைக் கூறி இடதுசாரி ஆா்வலா்களைக் கைது செய்த மகராஷ்டிர காவல்துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com