அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு: இடைத்தரகருக்கு 5 நாள் சிபிஐ காவல்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெலை 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு தில்லி சிபிஐ நீதிமன்றம்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு: இடைத்தரகருக்கு 5 நாள் சிபிஐ காவல்


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெலை 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை அனுமதியளித்தது. இந்த விசாரணை முடிந்து, வரும் 10-ஆம் தேதி அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
பிரிட்டனைச் சேர்ந்தவரான கிறிஸ்டியன் மிஷெல், துபையில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டார். 
தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் புதன்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, மிஷெல் அவரது வழக்குரைஞருடன் 5 நிமிடம் கலந்து பேசுவதற்கு நீதிபதி அனுமதியளித்தார்.
மிஷெலை நீதிமன்றக் காவலில் அனுப்ப வேண்டும் என்று அவரது வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார். அதே சமயம், அவரை 14 நாள்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடர்பாக ஏற்கெனவே திரட்டப்பட்டிருக்கும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு மிஷெலிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியிருப்பதாக சிபிஐ தெரிவித்தது.
இறுதியில், மிஷெலை 5 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு நீதிபதி அனுமதியளித்தார். வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையின் நகல்களை அவருக்கு வழங்குமாறு சிபிஐ-க்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மிஷெல் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு மீது எந்த தேதியில் விசாரணை நடத்தப்படும் என்பதை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.
யார் இந்த மிஷெல்?: 
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,100 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2010-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்துக்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சார்பில் இந்திய தரப்புக்கு ரூ.423 கோடி வரை லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2014-இல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. 
ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இடைத்தரகர்களாக செயல்பட்டதன் மூலமாக லஞ்சப் பணத்தில் பங்கு பெற்றதாக மிஷெல், குய்டோ ஹசாகே, கர்லோ கெரோஸா ஆகிய 3 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தலைமறைவாக இருந்த மிஷெல், துபையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளார்.
பிரிட்டன் தூதரகம் முயற்சி: இதற்கிடையே, மிஷெல் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் என்ற முறையில், அவர் குறித்த விவரங்களை இந்திய அதிகாரிகளிடம் அந்நாட்டுத் தூதரகம் கேட்டுள்ளது. 
இதுகுறித்து பிரிட்டன் தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், மிஷெலை தூதரக ரீதியாக தொடர்பு கொள்ள கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com